ஜெனிவா, ஆகஸ்ட் 23 – உலகை உலுக்கிய மனித உரிமை மீறல்களை தடுப்பதில் ஐ.நாவின் பாதுகாப்புப் பேரவை பொறுப்புடன் செயல்படவில்லை என ஐநா மனித உரிமைகள் ஆணையர் நவநீதம் பிள்ளை கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஐநா மனித உரிமைகள் ஆணையராக பணியாற்றிய நவநீதம் பிள்ளையின் பதவிக்காலம் நிறைவடையும் நிலையில் இருப்பதால், ஐநாவின் பாதுகாப்புச்சபையில் தமது கருத்துக்களை ஆணித்தரமாக தெரிவித்துள்ளார்.
ஐநா பாதுகாப்புப் பேரவை பற்றி அவர் வெளியிட்டுள்ள விமர்சனங்களில் கூறியிருப்பதாவது:- “ஐநாவின் பாதுகாப்புப்பேரவை பொறுப்புடன் செயல்பட்டு இருந்தால் லட்சக்கணக்கான மனித உயிர்களை பாதுகாத்திருக்க முடியும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்.
சகித்துக்கொள்ளவே முடியாத அளவில் மனித துன்புறுத்தல்கள் நடைபெற்று வருகின்றன. இதனை ஐநா பாதுகாப்புச்சபை இரண்டாம்பட்சமாகவே பார்க்கின்றது.”
“இதற்கு முக்கிய காரணம், ஐநாவின் உறுப்புநாடுகள் பரந்த சிந்தனைகளைக் கொண்டிருக்காமல் தனது வட்டாரம் மற்றும் குறுகிய அரசியல் தேவைகளுக்காக ஒருதலைப்பட்சமாக செயல்படுகின்றன.”
“உலகில் பல்வேறு நாடுகளில் நடந்துகொண்டிருக்கும் மோதல்களை தடுப்பது சிக்கலான ஒன்று தான் என்றாலும் அதை செய்யமுடியும். மோதல்களின் அடிப்படை காரணத்தை கண்டறிந்தால் மனித உரிமைகள் மீறப்படுவதை தடுக்க முடியும்” என்று கூறியுள்ளார்.
ஐநா பற்றி நவி பிள்ளை கூறிய வெளிப்படையான விமர்சனத்தை வரவேற்றுள்ள ஐநா செயலாளர் பான்கி மூன், “நவி பிள்ளையின் கருத்துக்கள் எந்தவொரு மேற்பூச்சுகளும் இல்லாத நேர்மையான ஒன்று.
அவர் உள்ளதை உள்ளபடியே கூறுபவர். மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்படும் மக்களுக்காக வாதாடுபவராக நவி பிள்ளை இருப்பார்” என்று கூறியுள்ளார்.