சென்னை, ஆகஸ்ட் 23 – மு.க. அழகிரியை திமுகவில் மீண்டும் சேர்ப்பது என்ற முடிவில் அக்கட்சித் தலைவர் கருணாநிதி இருக்கிறார். ஆனால் மு.க.ஸ்டாலின் மனைவி துர்காவோ இதனை மிகக் கடுமையாக எதிர்ப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலை முன்வைத்து திமுகவில் தன்னை தலைவர் நிலைக்கு உயர்த்திக் கொள்ள மு.க.ஸ்டாலின் பகீரத முயற்சிகளை மேற்கொண்டார். தேமுதிகவுடன் கூட்டணி அமைக்க படுதீவிரமாக முயன்றார்.
ஆனால் ஸ்டாலினின் இந்த வியூகத்துக்கு மு.க. அழகிரி வேட்டு வைக்கும் வகையில் பேட்டி கொடுத்தார். இதனைத் தொடர்ந்து மு.க. அழகிரி திமுகவை விட்டே நீக்கப்பட்டார். ஆனாலும் திமுக நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்தது.
குறிப்பிட்ட சில தொகுதிகளையாவது கைப்பற்றி தனது செல்வாக்கை காப்பாற்ற நினைத்த ஸ்டாலினுக்கு இது பெரும் சறுக்கலாகத்தான் இருந்தது. இதனாலே ஸ்டாலின் தமது கட்சிப் பொறுப்புகளை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். ஆனால் கருணாநிதி இதை ஏற்கவில்லை.
இதன் பின்னர் மு.க. அழகிரியை மீண்டும் கட்சியில் சேர்க்கும் நடவடிக்கையை கருணாநிதி மகள் செல்வி மேற்கொண்டார். இதற்கு கனிமொழி முழு ஆதரவாக இருந்தார்.
ஆனால் மு.க. அழகிரி தொடர்பான செல்வியின் தொடக்க நடவடிக்கைக்கே மிக மிக கடுமையாக எதிர்ப்பை வெளிப்படுத்தியவர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்காதான்.
உங்களுக்கு ஸ்டாலின் வேண்டுமா? அழகிரி வேண்டுமா? என்று செல்வியிடம் கேட்டு கடுப்படித்திருந்தார் துர்கா.
இந்த நிலையில் செல்வி மற்றும் கனிமொழியில் தொடர் முயற்சிகளால் மு.க. அழகிரியை மீண்டும் கட்சியில் சேர்க்கலாம் என்ற முடிவுக்கு கருணாநிதி வந்துள்ளாராம்.
அதே நேரத்தில் மீண்டும் அழகிரி கலகக் குரல் எழுப்பினால் அது செல்வி மற்றும் கனிமொழியின் பொறுப்புதான் என்று கருணாநிதி கூறியிருப்பதாகவும் தெரிகிறது.
ஆனால் கருணாநிதி முடிவெடுத்த பின்னரும் அப்படியெல்லாம் அழகிரியை சேர்க்கவே கூடாது.. என்று மிக உக்கிரமான கோபத்தில் சொல்லி இருக்கிறாராம் துர்கா ஸ்டாலின்.
இப்போது மனைவி சொல்வதை கேட்பதா? அப்பா சொல்வதை கேட்பதா? என்ற குழப்பத்தில் இருக்கிறாராம் ‘அடுத்த திமுக தலைவர்’ மு.க.ஸ்டாலின்!