சென்னை – தமிழகத்தின் ஊடகங்களும், அரசியல் கட்சிகளும் பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் ‘திமுகவில் பிளவு’ என்ற செய்திக்கான முதல் திரியை கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி கொளுத்திப் போட்டிருக்கிறார்.
“தொண்டர்கள் என் பக்கம்தான் இருக்கிறார்கள்” என்று கூறியிருக்கும் அழகிரி “திமுகவில் நான் இணைந்தால் வலிமையானத் தலைவராகி விடுவேன் எனப் பயப்படுகிறார்கள்” என்றும் கூறியிருக்கிறார்.
கலைஞரின் மறைவுக்குப் பின் முதன் முறையாக நாளை செவ்வாய்க்கிழமை திமுகவின் செயற்குழுக் கூட்டம் நடைபெறுகிறது. மறைந்த கருணாநிதிக்கு இரங்கல் தெரிவிப்பதை முக்கிய நோக்கமாகக் கொண்டு கூட்டப்படும் இந்தச் செயற்குழுக் கூட்டம் மற்ற விவகாரங்களையும் விவாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று திங்கட்கிழமை சென்னை மெரினாவில் கலைஞரின் நினைவிடத்தில் தனது குடும்பத்தினருடன் அஞ்சலி செலுத்திய பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய போதுதான் அழகிரி மேற்கண்டவாறு கூறியிருக்கிறார்.
அதேவேளையில், ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்த அழகிரி திமுகவின் தலைவர்கள் பலர் ரஜினிகாந்துடன் தொடர்பில் இருக்கிறார்கள் என்றும் கூறியிருப்பது ஊடகங்களிலும், அரசியல் பார்வையாளர்களிடத்திலும் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
தனது ஆதங்கத்தை இன்னும் சில தினங்களில் வெளிப்படுத்துவேன் என்றும் அழகிரி கூறியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து ஸ்டாலின்-அழகிரி இடையிலான மோதல் உருவெடுக்கத் தொடங்கி விட்டதாகவும், திமுகவில் பிளவுக்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்து விட்டதாகவும் தமிழக அரசியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.