சென்னை – “இந்தியா சரியான தருணத்தில், இலங்கை விவகாரத்தில் தலையிட்டு இருந்தால் 40,000 அப்பாவிகள் பலியாகி இருக்கமாட்டார்கள்” என முன்னாள் ஐநா மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை தெரிவித்துள்ளார்.
பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு நவீ பிள்ளை அளித்துள்ள பிரத்யேகப் பேட்டியில், “ஐநாவில் இந்தியா ஆளுமை நிறைந்த முக்கியமான நாடு. இலங்கையில் கொடூரக் குற்றங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, இந்தியா தலையிட்டு மக்களை காப்பாற்றி இருக்க வேண்டும். அது இந்தியாவின் கடமை. இறையாண்மை என்பது அது தான்.”
“ஒவ்வொரு நாடும் அதன் குடிமக்களை காப்பாற்ற வேண்டும். அது முடியாவிட்டால் மற்ற நாடுகள் தலையிட்டு அதனை சரி செய்ய வேண்டும். இது பற்றி தெளிவான அனைத்துலக சட்டங்கள் உள்ளன. என்னைப் பொருத்தவரை இந்தியா சரியான தருணத்தில் தலையிடத் தவறிவிட்டது. பிரச்சனை உருவான போதே தலையிட்டு சமரசத்தை ஏற்படுத்தி இருந்தால், 40,000 அப்பாவிகள் பலியாகி இருக்க மாட்டார்கள்” என்று அவர் தெரிவித்துள்ளார்.