புதுடில்லி,அக் 14- பெண்களுக்கு எதிரான குற்றங்கள், பாலியல் வன்முறை தொடர்பான, 300க்கும் மேற்பட்ட வழக்குகள், சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை, கொடூர தாக்குதல், கடத்தல் போன்ற சம்பவங்கள், நாடு முழுவதும் ஆங்காங்கே நடந்து வருகிறது. டில்லியில் மருத்துவ கல்லூரி மாணவி, பாலியல் பலாத்காரத்தால் பலியானதை அடுத்து, நாடு முழுவதும் மக்கள் மத்தியில்கொந்தளிப்பு ஏற்பட்டது. பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க வேண்டும். இதற்கு காரணமானவர்களுக்கு கடும் தண்டனை அளிக்க வேண்டும் என குரல்கள் எழுந்தன. இந்நிலையில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகள் குறித்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், புனேயை சேர்ந்த சமூக ஆர்வலர் விகர் துர்வே கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு சுப்ரீம் கோர்ட்டில் இருந்து கிடைத்துள்ள புள்ளி விபரம் வருமாறு: பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள், கொடூரமான தாக்குதல் போன்ற குற்றங்கள் தொடர்பாக, 325 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இது தவிர்த்து, கடத்தல், அத்துமீறல்கள் தொடர்பாக, 403 வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஊழல் தொடர்பான வழக்குகள், 472ம், சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டு நிரந்தரமாக செயல்பாடுகளை இழந்தவர்கள் தொடர்பான வழக்குகள், 588ம், காயம் அடைந்தவர்கள் தொடர்பான வழக்குகள், 45ம் விவகாரத்து வழக்குகள் 418ம் நிலுவையில் உள்ளன.இவ்வாறு, புள்ளிவிபரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.