ஹைதராபாட்: ஷாட்நகர் நகருக்கு அருகே நேற்று வியாழக்கிழமை கண்டெடுக்கப்பட்ட சடலம் 22 வயதான பிரியங்கா எனும், கால்நடை மருத்துவரது என்று சைபராபாட் காவல் துறை தெரிவித்துள்ளது.
அவரது மோட்டார் சைக்கிள் சக்கரத்தில் துளை ஏற்பட்டதால், அதனை சரிசெய்ய உதவ முன்வந்த இருவரால் அப்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
ஹைதராபாட்டின் புறநகரில் உள்ள ஷாம்ஷாபாட்டில் உள்ள தொண்டுபள்ளி சுங்கச்சாலை அருகே அப்பெண் கொல்லப்பட்டதாகவும், மேலும் அவரது உடல் 25 கிலோமீட்டர் தூரத்தில் ஷாட்நகர் நகருக்கு அருகிலுள்ள சத்தன்பள்ளி பாலத்தில் தூக்கி வீசப்பட்டு எரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
சைபராபாட் காவல் துறையினர் இரண்டு லாரி ஓட்டுனர்களை காவலில் எடுத்து விசாரித்து வருவதாகக் கூறியுள்ளனர். கால்நடை மருத்துவர் தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தியிருந்த சுங்கச்சாலை அருகே அவரது உடைகள், காலணிகள் மற்றும் ஒரு மதுபுட்டியையும் மீட்டுள்ளனர்.
அருகிலுள்ள ஒரு வாகன பழுதுபார்க்கும் கடையின் உரிமையாளர் காவல் துறையினரிடம், ஓர் இளைஞன் இரவு 9:30 மணி முதல் இரவு 10 மணி வரை ஒரு மோட்டார் சைக்கிளைக் கொண்டு வந்ததாகக் கூறியுள்ளார்.
அந்தப் பெண் இரவு 9:45 மணியளவில் தனது சகோதரியை அழைத்து தனது மோட்டார் சைக்கிள் சக்கரம் துளை ஏற்பட்டுள்ளதாகவும், யாரோ ஒருவர் தமக்கு உதவ முன்வந்ததாகவும் கூறியுள்ளார். மேலும், தமது வாகனத்தை பழுதுபார்ப்பதற்காக எடுத்துச் சென்றுள்ளதாகவும் கூறியுள்ளார்.
அருகிலுள்ள சில லாரி ஓட்டுநர்களைப் பார்த்து பயப்படுவதாகவும் அந்தப் பெண் தனது சகோதரியிடம் கூறியதாகக் கூறப்படுகிறது.
அவரது சகோதரி மோட்டார் சைக்கிளை விட்டுவிட்டு, சுங்கச்சாலைக்கு வந்து ஒரு வண்டியில் வீடு திரும்பவும் அறிவுறுத்தியிருந்தார். இருப்பினும், பின்னர் அவரது சகோதரி அவரை மீண்டும் அழைக்க முயன்றபோது அம்மருத்துவரின் தொலைபேசி அணைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
இரவு 11 மணியளவில் அப்பெண்ணின் குடும்பத்தினர் மருத்துவர் காணாமல் போனதாக காவல் துறையில் புகார் அளித்துள்ளனர். இதனிடையே, நேற்று வியாழக்கிழமை காலை ஷாட்நகர் அருகே காவல் துறையினர் எரிந்த உடலைக் கண்டுபிடித்தனர்.