Home இந்தியா ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கார் மாநிலங்களை பாஜக கைப்பற்றியது – தெலுங்கானா காங்கிரஸ் வசம்!

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கார் மாநிலங்களை பாஜக கைப்பற்றியது – தெலுங்கானா காங்கிரஸ் வசம்!

1272
0
SHARE
Ad

புதுடில்லி – நவம்பர் மாதத்தில் கட்டம் கட்டமாக நடைபெற்ற மத்தியப் பிரதேசம், மிசோரம், தெலுங்கானா, ராஜஸ்தான், சட்டிஸ்கர் ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் வாக்களிப்பு நிறைவு பெற்று, இன்று ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 3) முடிவுகள் வெளியிடப்பட்டன.

அதன்படி, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சட்டிஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பெரும்பான்மை சட்டமன்றத் தொகுதிகளை வென்று பாஜக ஆட்சி அமைக்கிறது.

இதன்மூலம், அடுத்தாண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவே வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு மேலும் வலுவடைந்துள்ளது.

#TamilSchoolmychoice

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 199 தொகுதிகளில் பாஜக 115 தொகுதிகளைக் கைப்பற்றியது. 69 தொகுதிகளை மட்டும் காங்கிரஸ் வெற்றி கொண்டது. 15 தொகுதிகளை மற்ற கட்சிகள் வென்றன.

230 தொகுதிகளைக் கொண்டது மத்தியப் பிரதேசம். பாஜக 165 தொகுதிகளைக் கைப்பற்றியது. 64 தொகுதிகளை காங்கிரசும் 1 தொகுதியை மற்ற கட்சியும் வெற்றி பெற்றன.

சட்டீஸ்கர் மாநிலத்தில் உள்ள 90 தொகுதிகளில் 54 தொகுதிகளை பாஜக வெற்றி கண்டது. காங்கிரஸ் 35 தொகுதிகளையும் 1 தொகுதியை மற்றொரு கட்சியும் வெற்றி கொண்டன.

தெலுங்கானா மாநிலத்தில் ஆளும் கேசிஆர் கட்சியான பிஆர்எஸ் என்னும் பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சி எதிர்பாராமல் படுதோல்வியைச் சந்தித்தது. சந்திரசேகர ராவ் முதலமைச்சராக கடந்த இரு தவணைகள் பதவி வகித்தார். தெலுங்கானா தனி மாநிலமாக உருவாக உண்ணாவிரதம் இருந்து போராடியவர் அவர். எனினும் ஆட்சியை இழந்திருக்கிறார். அந்த மாநிலத்தில் உள்ள 119 சட்டமன்றத் தொகுதிகளில் 64 தொகுதிகளில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது.

தெலுங்கானாவை கடந்த இரண்டு தவணைகளாக ஆண்டுவந்த சந்திரசேகர ராவ் அவர் போட்டியிட்ட சொந்த தொகுதியிலே தோல்வியடைந்தார். அவரின் கட்சி 39 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.

அதே வேளையில் கடந்த பொதுத் தேர்தலில் 1 சட்டமன்றத் தொகுதியை மட்டுமே கொண்டிருந்த பாஜக இந்த முறை 8 சட்டமன்றத் தொகுதிகளை வென்று தெலுங்கானா மாநிலத்தில் அபார வளர்ச்சி கண்டிருக்கிறது.

மிசோரம் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குகள் எண்ணிக்கை நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.