Home நாடு பொது மருத்துவமனைகளில் பழுதடைந்த மருத்துவ சாதனங்களை விரைந்து மாற்றுங்கள் – செனட்டர் லிங்கேஸ்வரன் கோரிக்கை

பொது மருத்துவமனைகளில் பழுதடைந்த மருத்துவ சாதனங்களை விரைந்து மாற்றுங்கள் – செனட்டர் லிங்கேஸ்வரன் கோரிக்கை

1040
0
SHARE
Ad
செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன்

கோலாலம்பூர்: நாட்டில் உள்ள பொது மருத்துவமனைகளில் பழுதடைந்த மற்றும் காலாவதியான மருத்துவ சாதனங்களை மாற்றுவதை விரைவுபடுத்துவதற்கு சுகாதார அமைச்சை வலியுறுத்திய செனட்டர் அ.லிங்கேஸ்வரன், இந்த விவகாரம் தொடர்பில் சுகாதார அமைச்சின் தாமதத்திற்கும் அதிக நிதியை உடனடியாக ஏற்பாடு செய்யாததற்கும் தனது கண்டனத்தைத் தெரிவித்தார்.

ஒரு மருத்துவரான லிங்கேஸ்வரன் பினாங்கு சுங்கை பாக்காப் மருத்துவமனையின் முன்னாள் இயக்குநருமாவார். ஜசெக சார்பில் பினாங்கு மாநில சட்டமன்றத்தைப் பிரதிநிதித்து அவர் செனட்டராக நியமிக்கப்பட்டவராவார்.

நாடாளுமன்ற மேலவையில் தான் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு சுகாதார அமைச்சின் சார்பில் சுகாதார அமைச்சர் வழங்கிய பதில் தொடர்பில் லிங்கேஸ்வரன் விளக்கமளித்தார்.

#TamilSchoolmychoice

அமைச்சின் பதிலில், பழுதடைந்த மருத்துவ சாதனங்களை மாற்றுவதற்காக  மருத்துவமனைகளின் 1.6 பில்லியன் ரிங்கிட் நிதி கோரிக்கை இன்னும் செயல்படுத்தப்படாமல் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

11,622 பழுதடைந்த மற்றும் காலாவதியான மருத்துவ சாதனங்கள் இருப்பதாகவும் அவர் கூறினார்.

“மருத்துவ சாதனங்கள் வாங்குவதற்கு அங்கீகரிக்கப்பட்ட ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் அடிப்படையில் இந்த சிக்கலைத் தீர்ப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது,” என்றும் லிங்கேஸ்வரன் ஊடகங்களுக்கு வழங்கிய செய்தியில் மேலும் கூறினார்.

“மலேசிய உயிர்கள் முக்கியம்” என குறிப்பிட்ட லிங்கேஸ்வரன் இந்த பழுதடைந்த மற்றும் காலாவதியான இயந்திரங்களை மாற்றுவதற்கு அவசரமாக நிதியை  வழங்குவதற்கு ஒரு வழி இருக்க வேண்டும் என்றார்.

“2020 முதல் இந்த ஆண்டு வரை சேவை செய்ய முடியாத மற்றும் வழக்கற்றுப் போன மருத்துவ உபகரணங்களை மாற்றுவதற்காக அனைத்து பொது மருத்துவமனைகளுக்கும் மொத்தம் RM1.01 பில்லியன் ஒதுக்கப்பட்டது. இதன்படி ஆண்டுக்கு 334 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு என நமக்குத் தெரியவருகிறது. ஆனால், இந்த நடைமுறைச் சிக்கலைத் தீர்க்க இன்னும் RM 1.3 பில்லியன் தேவைப்படுகிறது. தற்போதைய நிதி ஒதுக்கீடு நடைமுறைகளின்படி இது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. தவறான உபகரணங்களால், நோயாளிகளுக்கான சந்திப்புகள் மற்றும் சோதனை முடிவுகளுக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டும் என்பதால் முன்னுரிமைகள் மாற வேண்டும். இத்தகைய தாமதங்களால் உயிர்களை இழக்க நேரிடும். முறைகேடுகள் வழக்குகளுக்கு வழிவகுக்கும்,” என்றும் லிங்கேஸ்வரன் தெரிவித்தார்.

மக்களுக்கு சுகாதார சேவைகளை விரைவாக வழங்குவதில் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த சிக்கலை எவ்வாறு தீர்க்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது லிங்கேஸ்வரன் கேள்வி எழுப்பியிருந்தார்.

அவருக்கு வழங்கப்பட்ட பதிலில், முக்கிய நகரங்களில் உள்ள முதன்மை சுகாதார மையங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, கூடுதல் நிதி இருப்பின் அடுத்த கட்ட செயல்பாடுகள் கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்படும் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மருத்துவ உபகரணங்கள் சந்தையில் சமீபத்திய பதிப்புகள் என்பதால் அவை விலை அதிகம் என்று அது கூறியது.