மும்பை : பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுத்தி கூட்டணி அமோக வெற்றி பெற்றது. காங்கிரஸ் இடம் பெற்றிருந்த மகா விகாஸ் அகாடி கூட்டணி படுதோல்வி அடைந்தது.
மும்பையைத் தலைநகராகக் கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தல் கடந்த புதன்கிழமை (நவம்பர் 20) நடைபெற்றது. அந்தத் தேர்தலின் முடிவுகள் இன்று காலை முதல் வெளியாகத் தொடங்கின.
288 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக தனித்து 133 தொகுதிகளைக் கைப்பற்றியது. பாஜக, சிவசேனா, தேசியவாதக் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்த மகாயுத்தி கூட்டணி 236 தொகுதிகளைக் கைப்பற்றியது.
மகா விகாஸ் அகாதி என்ற கூட்டணியில் உத்தவ் தாக்கரே சிவசேனா, சரத் சந்திரபவார் தலைமையிலான தேசியவாதக் காங்கிரஸ், தேசியக் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடம் பெற்றிருந்தன. இந்தக் கூட்டணி 48 தொகுதிகளை மட்டுமே இதுவரை கைப்பறியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக பெற்ற வெற்றி மேம்பாட்டுத் திட்டங்களுக்கும், சிறந்த அரசாங்க நிர்வாகத்திற்கும் கிடைத்த வெற்றி என பிரதமர் நரேந்திர மோடி வர்ணித்தார். என்டிஏ என்னும் தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடர்ந்து மகாராஷ்டிரா வளர்ச்சிக்குப் பங்காற்றும் என மோடி உறுதியளித்தார்.