Home இந்தியா ஆந்திரா, தெலுங்கானாவில் 4-வது கட்ட வாக்களிப்பு

ஆந்திரா, தெலுங்கானாவில் 4-வது கட்ட வாக்களிப்பு

419
0
SHARE
Ad
பிரச்சாரத்தில் ஆந்திரா முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி

புதுடில்லி : ஏப்ரல் 19-இல் தொடங்கியது இந்தியப் பொதுத் தேர்தலின் முதல் கட்ட வாக்களிப்பு. இதுவரையில் 285 தொகுதிகளுக்கான தேர்தல் முடிவடைந்திருக்கிறது. ஏறத்தாழ பாதிக்கும் மேற்பட்ட நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் நடந்து விட்ட நிலையில் இன்று திங்கட்கிழமை மே 13-ஆம் தேதி நடைபெறுகிறது 4-வது கட்ட வாக்களிப்பு.

10 மாநிலங்களின் 96 தொகுதிகள் இந்த வாக்களிப்பில் பங்கு பெறுகின்றன.

4-வது கட்ட வாக்களிப்பில் ஆந்திராவும் தெலுங்கானாவும்!

சந்திரபாபு நாயுடு

இன்று நடைபெறும் 4-வது கட்ட வாக்களிப்பில் கவனிக்க வேண்டிய முக்கிய மாநிலங்கள் தெலுங்கானாவும், ஆந்திரப் பிரதேசமும்! தெலுங்கானாவின் 17 தொகுதிகள், ஆந்திராவின் 25 தொகுதிகள் என இரண்டு மாநிலங்களுக்கும் ஒட்டு மொத்தமாக ஒரே நாளில் வாக்களிப்பு நடைபெறுகிறது.

#TamilSchoolmychoice

ஆந்திராவின் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பும் இன்று மே13-ஆம் தேதி நடைபெறுகிறது.

ஆந்திராவில் பாஜக-தெலுகு தேசம்- நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா ஆகிய மூன்று கட்சிகள் இணைந்த கூட்டணி போட்டியிடுகிறது. 25 நாடாளுமன்றத் தொகுதிகளில் இந்தக் கூட்டணி எத்தனை தொகுதிகளைப் பெறும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

நடப்பு ஆந்திரா முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்குமா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.

தெலுங்கானாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. மாநிலத்திலுள்ள 17 நாடாளுமன்றத் தொகுதிகளில் பாஜக தனித்து நின்று எத்தனை தொகுதிகளைப் பெறும்? காங்கிரஸ் மாநில ஆட்சியில் இருப்பதால் நாடாளுமன்றத் தேர்தலில் அந்தக் கட்சிக்குத் சாதகமா? கடந்த சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்து ஆட்சியை இழந்த பிஆர்எஸ் என்னும் கே சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரத் ராஷ்ட்ர சமிதி வீறு கொண்டு எழுந்து கணிசமான நாடாளுமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றுமா? என்பது போன்ற பல கேள்விகளுக்கு விடையாக அமையும் இன்றைய 4-வது கட்ட வாக்களிப்பின் முடிவுகள்.