அக் 30- “ஏழை மக்கள் வசிக்கும் நாடு இந்தியா; இங்கு, புல்லட் ரயில் போக்குவரத்துக்கு முன்னுரிமை அளிக்கத் தேவையில்லை” என, ரயில்வே அமைச்சர், மல்லிகார்ஜுன கார்கே, கூறினார்.
ரயில்வே ஆணையத்தின் சார்பில், ‘அதிவேக ரயில் போக்குவரத்துக்கான ஆணையம்’ துவக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா, டில்லியில் நேற்று நடந்தது. இந்த விழாவில், ரயில்வே அமைச்சர், மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது: வெளிநாடுகளில் இருப்பது போல, புல்லட் ரயில்களை, இந்தியாவிலும் அறிமுகப்படுத்த வேண்டுமென்ற கோரிக்கை உள்ளது. புல்லட் ரயில் போக்குவரத்து, மிகவும் ஆடம்பரமானது மட்டுமல்ல; அதிக செலவையும் ஏற்படுத்தக் கூடியது. தனி தண்டவாளங்கள் உள்பட, பல்வேறு புதிய கட்டமைப்புகளும், அதற்கு தேவை. தண்டவாளங்களுக்கு, தனியாக வேலி அமைக்க வேண்டும். எனவே, புல்லட் ரயில் போக்குவரத்து, இந்தியாவைப் பொறுத்தவரை, சமூக பிரச்னையாக மாறும் வாய்ப்பு உள்ளது.
மேலும், இந்தியாவில் வசதியற்ற ஏழைகள் மற்றும் நடுத்தர மக்கள் அதிகம் வசிக்கின்றனர். இவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் ரயில் போக்குவரத்து மிகவும் அத்தியாவசியம். புல்லட் ரயில் போக்குவரத்தில் விமான கட்டணத்திற்கு இணையான கட்டணங்கள் இருக்கும். எனவே, புல்லட் ரயில்போக்குவரத்துக்கு இந்தியாவில் முன்னுரிமை அளிக்கத் தேவையில்லை. அதிவேக ரயில்களை அதிக எண்ணிக்கையில் இயக்க வேண்டுமென்பதே தற்போதைய தேவை. அதற்கு தற்போதுள்ள ரயில்வே கட்டமைப்புகளை மேலும் மேம்படுத்தினாலே போதும். அதற்கான நடவடிக்கைகளில் தான் ரயில்வே அமைச்சகம் இறங்கியுள்ளது. இவ்வாறு, அமைச்சர் கார்கே கூறினார்.
விழாவில் அதிவேக ரயில் போக்குவரத்து ஆணையத் தலைவர், சதீஷ் அக்னிஹோத்ரி பேசுகையில், “மும்பை – ஆமதாபாத், டில்லி – பாட்னா, டில்லி – ஜோத்பூர், டில்லி – அமிர்தசரஸ், சென்னை – ஐதராபாத், சென்னை – பெங்களூரு – திருவனந்தபுரம், ஆகிய வழித்தடங்களில், அதிவேக ரயில் பணிகள் ஆரம்பிக்கப்படும்,” என்றார்.