ஆமதாபாத், அக் 30- நாட்டின் முதல் பிரதமராக சர்தார் படேல் பதவி வகிக்கவில்லையே என மக்கள் இப்போதும் கவலைப்படுகின்றனர். சர்தார் படேல், முதல் பிரதமராகி இருந்தால் நாட்டின் தலைவிதியே மாறியிருக்கும்,” என பிரதமர் மன்மோகன் சிங் முன்னிலையில், பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
“இந்தியாவின் இரும்பு மனிதர்’ என போற்றப்படுபவரும் நாட்டின் முதல் உள்துறை அமைச்சருமான சர்தார் வல்லபாய் படேல் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர். இவருக்கு குஜராத்தில் நர்மதா ஆற்றின் அருகே உலகிலேயே மிகப் பெரிய சிலையை அமைப்பதற்கான முயற்சியை அம்மாநில முதல்வரும் பா.ஜ., பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி செய்து வருகிறார். இந்நிலையில் ஆமதாபாத்தில், சர்தார் வல்லபாய் படேலுக்காக அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியக துவக்க விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மன்மோகன் சிங் நேற்று வந்திருந்தார். அவரை விமான நிலையத்தில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். சமீபகாலமாக பா.ஜ., பிரசார கூட்டங்களில் பிரதமர் மன்மோகன் சிங்கையும் காங்கிரஸ் அரசையும் கடுமையாக தாக்கி பேசிவரும் நரேந்திர மோடி இந்த விழாவில் பிரதமருடன் ஒரே மேடையில் தோன்றினார். அப்போது, இருவரும் சிரித்து பேசியபடி அருகருகே அமர்ந்திருந்தனர்.
விழாவில் நரேந்திர மோடி பேசியதாவது:நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமக்களும் நேருவுக்கு பதிலாக சர்தார் படேல் முதல் பிரதமராகவில்லையே என, இப்போதும் வருத்தப்படுகின்றனர். அவர் நாட்டின் முதல் பிரதமராகியிருந்தால், இந்தியாவின் தலைவிதியே மாறியிருக்கும். நாடு சுதந்திரம் அடைந்தபின் அதை ஒருங்கிணைப்பதற்கு பெரும் பங்காற்றியவர் படேல். தற்போது, நாட்டின் ஒற்றுமைக்கு பயங்கரவாதிகள் நக்சலைட்டுகள் ஆகியோரால் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இவ்வாறு, மோடி பேசினார். பிரதமர் முன்னிலையிலேயே மோடி இவ்வாறு பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதன்பின் பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது:சர்தார் படேல், நாட்டின் மிகப் பெரிய தலைவர். மதசார்பற்றவர். நாட்டின் ஒற்றுமைக்கும், மதச்சார்பின்மைக்கும் பாடுபட்டவர். தன் வாழ்நாள் முழுவதும் காங்கிரஸ்காரராகவே இருந்தார். அவர் இருந்த கட்சியில் நானும் இருந்ததற்காக பெருமைப்படுகிறேன்.படேல் கட்சிக்கும் நாட்டிற்கும் சிறந்த சேவகராக இருந்தார். காந்தியை படேல் தந்தை போல் எண்ணினார். காந்தியும் அவ்வாறே எண்ணினார். மகாத்மா காந்தி படேல் இருவரும் ஒன்றாக 16 மாதம் சிறை தண்டனை அனுபவித்தனர். படேல் இந்தியாவின் ஒற்றுமையில் முழு நம்பிக்கை வைத்திருந்தார். அவர் இந்தியா முழுவதும் ஓர் கிராமம் என்றும் இங்கு வாழும் அனைத்து சமூக மக்களும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என்றும் கருதினார். படேலின் பங்களிப்பு பற்றி இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, சர்தார் படேல் மற்றும் மவுலானா அபுல்கலாம் ஆசாத் ஆகியோர் இந்தியாவின் ஒற்றுமையில் முழு நம்பிக்கை வைத்திருந்தனர். அவர்கள் மதச்சார்பற்றவர்களாகவும் ஏழைகள் மீது கருணை கொண்டவர்களாகவும் இருந்தனர். அவர்கள் பொறுமையுள்ளவர்களாகவும் மற்றவர்களின் கருத்துக்களை மதிப்பவர்களாகவும் இருந்தனர். தற்போது, அவர்களின் கொள்கைகள் நாட்டில் பற்றாக்குறையாக உள்ளது. பல்வேறு விஷயங்களில் நேருவும் சர்தார் படேலும் ஒருமித்த கருத்தை கொண்டிருந்தனர். ஒருவரின் கருத்தை மற்றொருவர் மதித்தார். படேல் 500 மாகாணங்களை ஒருங்கிணைத்து இந்தியாவை முழுமைப்படுத்தினார். சிலர் படேலின் கொள்கைகளை மறந்துவிட்டனர் என கூறினார்.
இதற்கிடையே, சர்தார் படேலுக்கு பிரமாண்ட சிலை அமைப்பதற்கான துவக்க விழாவுக்கு மத்திய வர்த்தக துறை அமைச்சரும், காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான ஆனந்த் சர்மாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாவும் அதை அவர் புறக்கணிப்பதாக அறிவிததுள்ளதாகவும் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.