கொழும்பு, நவம்பர் 14- தமிழகத்தின் கோரிக்கை ஏற்று பிரதமர் மன்மோகன் சிங் காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்கவில்லை என்று இலங்கை அதிபர் ராஜபக்சே தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கொழும்புவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காமன்வெல்த் மாநாட்டில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் பங்கேற்று இருப்பது திருப்தி அளிப்பதாக கூறினார். தமிழக மக்களின் உணர்வுகள் மதித்து பிரதமர் மன்மோகன் சிங் மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை என்று செய்தியாளர் ஒருவர் கூறியபோது குறுக்கிட்ட ராஜபக்சே, தனக்கு மன்மோகன் சிங் எழுதிய கடிதத்தில் அவ்வாறு குறிப்பிடபடவில்லை என்று கூறினார்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த காமன்வெல்த் மாநாட்டிலும் மன்மோகன் சிங் கலந்து கொள்ளவில்லை என்றும் அவர் கூறினார். தமிழக உணர்வுகளை மதித்து பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை என்று மத்திய அரசு கூறிவந்த நிலையில், ராஜபக்சேவின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.