கோலாலம்பூர், நவ 14 – பிகேஆர் உதவித் தலைவரும், பாடாங் செராய் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான என்.சுரேந்திரனுக்கு எதிராக மக்களவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டு அவர் 6 மாதங்களுக்கு தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சுரேந்திரனை இடைநீக்கம் செய்வதாக மக்களவை துணை சபாநாயகர் டத்தோ ரொனால்ட் கியான்டி இன்று அறிவித்தார்.
கடந்த செவ்வாய்கிழமை, ஜாலான் பி ரம்லி ஸ்ரீ முனீஸ்வரர் காளியம்மன் ஆலய விவகாரத்தில், மக்களவையில் கொண்டுவரப்பட்ட அவசர தீர்மானத்திற்கு எதிராக சுரேந்திரன் கருத்துத் தெரிவித்தார்.
சபாநாயகர் பண்டிகார் அமின் மூலியா, மக்களவை பணியைத் தாமதப்படுத்துகிறார் என்று சுரேந்திரனை மக்களவையிலிருந்து வெளியேறுமாறு உத்தரவிட்டார்.
இந்நிலையில், சுரேந்திரனுக்கு எதிராக இன்று மக்களவையில் தீர்மானம் கொண்டுவர வாக்களிப்பு நடைபெற்றது.
அதில் பக்காத்தான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொள்ள மறுத்ததோடு, தங்களுக்குக் கொடுக்கப்பட்ட தீர்மான அறிக்கைகளை கிழித்து, கசக்கி எறிந்தனர்.
ஷா ஆலம் நாடாளுமன்ற உறுப்பினர் காலிட் சமட் ஒரு படி மேலே போய், அந்த அறிக்கையில் காகித விமானம் செய்து பறக்கவிட்டார்.
எனினும், தேசிய முன்னணியைச் சேர்ந்த 92 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுரேந்திரனுக்கு எதிராக வாக்களித்ததால், விசாரணையின்றி அவருக்கு எதிராகத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
நாடாளுமன்றத்திற்கு வெளியே இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுரேந்திரன், “நான் எனது பணிகளைத் தொடருவேன். 6 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் வருவேன். இடைநீக்கம் செய்யப்பட்டாலும் தொடர்ந்து மக்களுக்குக்காகப் போராடுவேன்” என்று தெரிவித்தார்.