புதுடெல்லி, நவம்பர் 14- இலங்கையில் நடைபெற்ற மனித உரிமைகள் மீறல் குறித்து அறிந்து கொள்ளவே இலங்கை செல்வதாக இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் விளக்கம் அளித்துள்ளார்.
ஒருநாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ள அவர், பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினார். டெல்லியில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்வதில்லை என்ற இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கின் முடிவு வரவேற்கதக்கது என்று கூறினார்.
மனித உரிமைகள் பிரச்சனை குறித்து அறிந்து கொள்ளவே இலங்கை செல்வதாக கூறிய அவர், இங்கிலாந்தும் இந்தியாவும் பல்வேறு துறைகளில் செயல்பட்டு வருவதாக கூறினார். தீவிரவாதத்திற்கு எதிராக இரு நாடுகளும் இணைந்து போராட வேண்டும் என்றும் அவர் கூறினார். இந்திய பயணத்தை முடித்து கொண்டு இன்று அவர் கொழும்பு செல்கிறார்.