லண்டன், மார்ச் 24 – பிரிட்டனின் பிரதமராக தான் மீண்டும் தேர்வு செய்யப்பட்டாலும், அந்தப் பதவியை தான் ஏற்கப்போவதில்லை என டேவிட் கேமரூன் அறிவித்துள்ளார்.
பிரிட்டனில் அடுத்து நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் டேவிட் கேமரூன் மீண்டும் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்ப்புகள் உள்ளதாக அந்நாட்டு வட்டாரங்கள் கூறிவரும் நிலையில், பிரதமர் பதவி பற்றி டேவிட் கேமரூன் கூறியதாவது:-
“மூன்று முறை பிரதமர் பதவி வகிப்பது என்பது வழக்கத்தை விட அதிகமான சுமை. எனவே புதிய தலைமைக்கு வாய்ப்பளிப்பதே நல்லது. என்னைப் பொருத்தவரை எனக்கு அடுத்து தலைமைப் பொறுப்பிற்கு வரக் கூடியவர்கள் என்று பார்த்தால், தற்போதய உள்துறை அமைச்சராக இருக்கும் தெரீசா மே, நிதியமைச்சர் ஜார்ஜ் ஆஸ்பர்ண் மற்றும் லண்டன் மேயராக இருக்கும் போரிஸ் ஜான்சன் ஆகியோர் உள்ளனர். இவர்களில் யாராவது ஒருவர் நாட்டை வழி நடத்திச் செல்ல வாய்ப்புள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.
பிரிட்டனில் எதிர்வரும் மே மாதம் ஏழாம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தனது அரசியல் எதிர்காலம் குறித்த கேமரூன் தெரிவித்துள்ள கருத்து இங்கிலாந்து அரசியல் வட்டாரத்தில் பல்வேறு விவாதங்களை எழுப்பி உள்ளது.