கோலாலம்பூர், நவ 15 – இலங்கையில் இன்று தொடங்கும் காமன்வெல்த் மாநாட்டில் மலேசிய குழுவிற்குத் தலைமையேற்று பிரதமர் நஜிப் துன் ரசாக் நேற்று சிப்பாங் அனைத்துலக விமானநிலையத்தில் இருந்து புறப்பட்டு கொழும்பு சென்றடைந்தார்.
இம்மாநாட்டில் 54 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொள்வதாகக் கூறப்படுகின்றது.
கொழும்பு, மஹிந்த ராகஜபக்ஷ தாமரைத் தடாக அரங்கில் இன்று காலை 10.15 முதல் 11.15 வரை அங்குரார்ப்பண நிகழ்வு நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் காமன்வெல்த் அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா, அதிபர் மஹிந்த ராஜபக்சே, பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸ், காமன்வெல்த் அமைப்பின் தற்போதைய தலைவரும் ஆஸ்திரேலியப் பிரதமருமான டொனி அயோட் ஆகியோர் உரை நிகழ்த்த உள்ளனர்.
மாநாட்டில் அங்குரார்ப்பண நிகழ்வில் பங்கேற்கவுள்ள பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸ் மற்றும் அனைத்துப் நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளுக்கும் செங்கம்பள வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
“வெள்ளிக்கிழமை பிரதமருடன் பேசுகிறேன்”
இலங்கை இராணுவத்தினரால் ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு இன்னும் தீர்வு கிடைக்காத நிலையில், இங்குள்ள தமிழர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு, காமன்வெல்த் மாநாட்டை பிரதமர் நஜிப் புறக்கணிக்க வேண்டும் என்று மலேசியாவில் வாழும் பல்வேறு தமிழ் அமைப்புகள் குரல் கொடுத்தன.
ம.இ.கா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல், கடந்த நவம்பர் 11 ஆம் தேதி விடுத்த அறிக்கையில், இவ்விவகாரம் தொடர்பாக இன்று வெள்ளிக்கிழமை பிரதமருடன் பேசுவேன் என்று தெரிவித்திருந்தார்.
மாநாட்டில் கலந்து கொள்ள நேற்றே பிரதமர் நஜிப் இலங்கை சென்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.