Home உலகம் மனித உரிமை மீறல்கள் தொடர்பான இலங்கையின் விசாரணையில் திருப்தி இல்லை : கேமரூன்

மனித உரிமை மீறல்கள் தொடர்பான இலங்கையின் விசாரணையில் திருப்தி இல்லை : கேமரூன்

571
0
SHARE
Ad

david-camelon

இங்கிலாந்து, நவம்பர் 21- மனித உரிமைகள் தொடர்பாக இலங்கையில் நடைபெறும் விசாரணைகள் திருப்தி அளிக்கவில்லை என்று இங்கிலாந்து அரசு கூறியுள்ளது. அண்மையில் இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்ற அந்நாட்டு பிரதமர் டேவிட் கேமரூன், இலங்கை வடக்கு மகாணத்திற்கு சென்று போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு அங்குள்ள தமிழ் மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

போரின் போது அங்கு நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக வரும் மார்ச் மாதத்திற்குள் சர்வதேச விசாரணையை தொடங்க வேண்டுமென்று இலங்கை அரசையும் அவர் வலியுறுத்தி இருந்தார். இதனை ஏற்க இலங்கை அரசு மறுத்துவிட்டது. இதனையடுத்து தமது இலங்கை பயணம் தொடர்பாக இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பேசிய கேமரூன், காமன்வெல்த் அமைப்பின் கொள்கைகளை பாதுகாக்கவே மாநாட்டில் தாம் பங்கேற்றதாக தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பதென்ற தமது முடிவு, உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் பிரச்சனையை வெளிச்சமிட்டு காட்ட உதவியதாகவும் குறிப்பிட்டார். இறுதிகட்டப் போரின் போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டுமென்றும் வலியுறுத்தினார். இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணையை வரும் மார்ச் மாதத்திற்குள் துவங்காவிட்டால், சர்வதேச நாடுகளின் தலையீடு இருக்குமென்று கேமரூன் மீண்டும் எச்சரித்துள்ளார்.

இலங்கை விவகாரத்தை அப்படியே விட்டுவிட முடியாதென்றும் அவர் கூறினார். இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, அந்நாட்டு அரசு நடத்தி வரும் விசாரணைகள் முழுமையாக இல்லையென்று குறிப்பிட்ட கேமரூன், அந்த விசாரணைகளில் பிரிட்டனுக்கு திருப்தி இல்லையென்றும் தெரிவித்தார்.