Home இந்தியா தேர்தல் பிரசார மேடையில் நரேந்திர மோடியை கொல்ல சதி: சிமி தீவிரவாதிகள் கைது

தேர்தல் பிரசார மேடையில் நரேந்திர மோடியை கொல்ல சதி: சிமி தீவிரவாதிகள் கைது

605
0
SHARE
Ad

modi_350_051313081354

புதுடெல்லி, நவ 21– பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி நாடு முழுவதும் தேர்தல் பிரசார சுற்றுப் பயணத்தில் ஈடுபட்டுள்ளார். அவரை காலிஸ்தான் தீவிரவாதிகளை பயன்படுத்தி படுகொலை செய்ய பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. சதி திட்டம் தீட்டி இருப்பதாக உளவுத்துறை இந்த மாதம் தொடக்கத்தில் எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து நரேந்திர மோடிக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

இந்த நிலையில் நரேந்திர மோடியை கொல்ல இந்தியன் முஜாகிதீன் மற்றும் சிமி தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டி இருப்பதாக மத்திய உளவுத்துறை மீண்டும் எச்சரிக்கை விடுத்தது. கடந்த மாதம் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள கண்ட்வா ஜெயிலில் இருந்து 7 சிமி தீவிரவாதிகள் தப்பியோடினார்கள். அவர்களில் அபித் மிர்சா என்ற தீவிரவாதிகள் மட்டும் பிடிபட்ட நிலையில் மற்ற 6 தீவிரவாதிகளும் தலை மறைவாகி விட்டனர்.

#TamilSchoolmychoice

அந்த 6 தீவிரவாதிகளும் இந்தியன் முஜாகிதீன், சிமி தீவிரவாதிகளுடன் போய் சேர்ந்து விட்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் நரேந்திர மோடியை கொல்ல சதி திட்டம் வகுத்து இருக்கிறார்கள். இவர்களுக்கு அல்–உம்மா இயக்கம் தேவையான உதவிகளை செய்து கொடுத்து வருவதை உளவுத்துறை கண்டு பிடித்துள்ளது.

தேர்தல் பிரசாரம் செய்ய நரேந்திர மோடி வரும் போது அவரது கார் மீது, வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காரை மோத செய்து நாசவேலை ஏற்படுத்த முதலில் தீவிரவாதிகள் திட்ட மிட்டனர். ஆனால் மோடி கார் அருகே செல்ல முடியாது என்பதால் பிரசார மேடை பகுதியில் அவரை கொல்ல தீவிரவாதிகள் திட்டமிட்டனர்.

தீவிரவாதிகளின் தொலைப்பேச்சை இடைமறித்து கேட்ட போது, சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தல் பிரசாரத்துக்கு வரும் மோடியை கொல்ல ரகசிய திட்டங்கள் தீட்டப்பட்டு இருப்பதை உளவுத்துறையினர் அறிந்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் கடந்த ஒரு வாரமாக சத்தீஸ்கர் மாநில காவல்துறையினர் அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர்.

காவல்துறையினரின் தீவிர வேட்டையில் ஷேக் அஜில்லா, மொகினூதீன் கியூரசி, அப்துல் வாகித்கான், உமர்சித்திக், ஷேக் ஹபிபுல்லா, ரோசன் ஷேக், ராஜு மிஸ்திரி உள்பட 8 சிமி தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏராளமான வரை படங்கள், ஆவணங்கள் சிக்கின.

மோடி பிரசாரம் செய்ய உள்ள பொதுக்கூட்ட மேடை பகுதிகளின் வரை படங்களை கண்ட காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்திய போது, மோடியை கொல்ல இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகளும் சிமி தீவிரவாதிகளும் ஒருங்கிணைந்து செயல்படுவது தெரிய வந்தது.

குறிப்பாக இந்தியன் முஜாகிதீன் அமைப்பை உருவாக்கியவர்களில் ஒருவனான அப்துஸ் சுபான் கியூரசி என்ற தவூகீர் என்பவன் மோடியை கொல்லும் சதி திட்டத்தின் பின்னணியில் இருப்பது தெரிந்தது. பாட்னா கூட்டத்தில் குண்டு வெடிப்பு நடத்திய தெக்சீன் அக்தார் என்பவன் டைம் பாம் செய்து கொடுத்து உதவி இருப்பதாக தெரிய வந்துள்ளது.

உளவுத் துறை சரியான நேரத்தில் தகவல் கொடுத்ததால் சத்தீஸ்கர் மாநிலத்தில் மோடி மீது நடத்தப்பட இருந்த நாசவேலை திட்டம் முறியடிக்கப்பட்டது. என்றாலும் தீவிரவாதிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட வரை படங்களில் கான்பூர், டெல்லி, அம்பிகாபூர் ஆகிய ஊர்களில் மோடி பேசும் பிரசார கூட்ட இடம் பற்றிய தகவல்கள் இருந்ததால், மோடி உயிருக்கு தீவிரவாதிகள் அடுத்தடுத்து குறி வைத்திருப்பது உறுதியாகியுள்ளது.

இதையடுத்து டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம் ஆகிய 4 மாநிலங்களும் உஷார் படுத்தப்பட்டுள்ளன. இந்த மாநிலங்களில் மோடி பேசும் கூட்ட மேடை பகுதியில் குண்டுகளை வைக்க தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

எனவே மோடி பேசும் தேர்தல் பிரசார மேடை மற்றும் அரங்குகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.