சென்னை, ஜன 20 – 3 ஜீனியஸ் என்ற படத்தை மலேசிய நாட்டைச் சேர்ந்த தமிழர்களான கவுதம், கனி, கிரேஸ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இது ஒரு வித்தியாசமான படம். அதாவது குழந்தைகள் உடம்பில் ஒரு ஜிப்பை பொருத்திவிட்டால் அவர்கள் இருக்கும் இடத்தை வீட்டில் இருந்தே கண்காணிக்கலாம். அவர்கள் கடத்தப்படுவதை தடுக்கலாம். நடைமுறைக்கு வராத இந்த முறை நடைமுறைக்கு வந்தால் எப்படி இருக்கும் என்கிற கதைதான் இத்திரைப்படம். இதில் விஞ்ஞானியாக பாக்யராஜ் நடித்துள்ளார்.
இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கே.பாக்யராஜ் பேசியதாவது, : “நான் இந்தப் படத்தில் நடிக்க போகும்போது ஒரு நடிகனாக போனேன். ஆனால், திரும்பி வரும்போது ஒரு உறவினராக வந்தேன். இந்த முழு படத்தையும் மலேசியாவில் எடுத்தார்கள். தயாரிப்பாளர் நடிகர் என்கிற உணர்வே இல்லாமல் தங்கள் குடும்பதில் ஒருவனாக என்னை நினைத்து அன்பும், பாசமும் காட்டினார்கள். வேலை செய்பவர்களும் முதலாளி தொழிலாளி என்ற பாகுபாடு இல்லாமல் நடந்து கொண்டார்கள்.
மேலும், நான் மலேசிய நாட்டை பார்த்து மூன்று விதங்களில் பொறமைப்பட்டேன். அங்கு மூவின மக்களும் “ஒரே மலேசியா” என்ற தாரக மந்திரத்தோடு வாழ்கிறார்கள். இரண்டாவதாக, நள்ளிரவு 3 மணிக்கு கடைகளுக்கு சாப்பிட சென்றாலும் அங்கு கடைகள் திறந்திருக்கும். நாம் என்ன வேண்டுமானாலும் சாப்பிடலாம். ஒவ்வொரு கடையிலும் பல பேர் எப்போதும் சாப்பிட்டுக் கொண்டே இருக்கிறார்கள். மூன்றாவது விசயம் மூன்று நாளைக்கு ஒரு முறை அங்கே மழை பெய்கிறது. இதை நினைத்து தாம் மிகவும் பொறாமைப்படுவதாக அவர் கூறினார்.
தொடந்து பேசிய அவர், மலேசியாவில் தயாரிக்கப்படும் தமிழ் படங்கள் தமிழ்நாட்டிலும், இங்குள்ள படங்கள் மலேசியாவிலும் வெற்றி பெற்றால் இரு நாட்டு உறவும் பலப்படும். என்று கூறினார் .