ஆமதாபாத், 13 – குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள தேநீர் கடையில் அமர்ந்து கொண்டு, நாட்டின் பல நகரங்களில் உள்ள 1000 டீ கடைகளில் டி.டி.எச் தொழில்நுட்பம் மூலம் நரேந்திர மோடி மக்களிடம் கலந்துரையாடியுள்ளார்.
”தேநீர் அருந்தி கொண்டே விவாதிக்கலாம்” என்ற இந்த கலந்துரையாடலில் மோடி பேசுகையில், தேநீரும், தொழில் நுட்பமும் இந்த வாய்ப்பை வழங்கியுள்ளது என்று குறிப்பிட்டார்.
மேலும், ”மோசமான நிர்வாகத்துக்கு இந்தியா ஒரு முன்னுதாரணமாக உள்ளது. இது குறித்து சாதாரண மக்கள் தொடர்ந்து விவாதிக்கின்றனர். மத்திய அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். ஒவ்வொருவரும் அரசியல் அறிவு பெற வேண்டும். சட்டசபை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மக்களை நேரடியாகச் சந்தித்து கலந்துரையாட வேண்டும்,” என்றார்.
அதோடு, குஜராத்தில் உள்ள தனியார் இந்தி தொலைக்காட்சி ஒன்றின் வழியாக, நாடு முழுவதும் உள்ள மக்களிடம் கலந்துரையாடியுள்ளார்.
இதில் சிறப்பு என்னவென்றால், தமிழ்நாட்டில் திண்டுக்கல்லில் உள்ள அவரது ஆதரவாளர்கள் அவரது நேரடி ஒளிபரப்பை தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தியுள்ளனர்.
திண்டுக்கல்லில் இருந்து ஒரு பார்வையாளர், “விசாவிற்கு இதுவரை மறுப்பு தெரிவித்து வந்த அமெரிக்கா, பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன், தனது நிலையை மாற்றிக்கொண்டுள்ளது. அது குறித்து தங்கள் கருத்து என்ன,” என்று கேட்டார்.
இதற்கு பதில் அளித்த மோடி, “அமெரிக்காவிற்கான இந்திய தூதருடன் பேசிய பின்பு தான், அவர்கள் என்ன காரணத்திற்காக மறுப்பு தெரிவித்தார்கள் என்பதை தெரிந்து கொள்ள முடியும். இருந்தாலும், இந்த மாற்றம் வரவேற்கத்தக்கது,” என பதில் அளித்தார்.
பா.ஜ வின் இந்த தேர்தல் பிரசார யுக்தி, மாவட்டத்தில் உள்ள மற்ற கட்சியினரையும் யோசிக்க வைத்துள்ளது.