Home இந்தியா சிதம்பரம் மீது அரசு அதிகாரி புகார்!

சிதம்பரம் மீது அரசு அதிகாரி புகார்!

479
0
SHARE
Ad

P-Chidambaram_71புதுடில்லி, பிப் 13 – கடந்த வாரம் நடைபெற்ற உயர்மட்டக் குழு கூட்டத்தின் போது மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தன்னை அவமானப்படுத்தியதாக மத்திய நகர்புற வளர்ச்சித்துறை செயலாளர் சுதீர் கிருஷ்ணா புகார் அளித்துள்ளார். இது தொடர்பான புகார் கடிதத்தை சுதீர் கிருஷ்ணா, மத்திய நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கமல்நாத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.

ஜவஹர்லால் நேரு தேசிய நகர்புற புனரமைப்பு திட்டத்திற்கு கூடுதல் நிதிஉதவியை மத்திய அரசிடம் இருந்து ஒதுக்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம் கடந்த வாரம் நடைபெற்றது. இதில் மத்திய நிதி அமைச்சகத்தின் நிதி ஒதுக்கீட்டிற்காக காத்திருக்கும் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில், உத்திர பிரதேசத்தைச் சேர்ந்த அதிகாரியான சுதீர் கிருஷ்ணாவும் கலந்து கொண்டுள்ளார். அப்போது, தனது கருத்தை விளக்கக் கூற சுதீர் முயன்ற போது நிதியமைச்சர் சிதம்பரம் குறுக்கிட்டு, சுதீர் பேசும் ஆங்கிலம் தனக்கு புரியவில்லை என தெரிவித்துள்ளார். இதனால் சுதீர் கிருஷ்ணா தனது கருத்தை இந்தியில் தெரிவித்துள்ளார். அதனை சிதம்பரத்தின் அதிகாரிகள் அவருக்கு ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து கூறி உள்ளனர்.

சுதீர் கிருஷ்ணா பலமுறை விளக்கிக் கூறியும் அவரது கருத்து விளங்கவில்லை என சிதம்பரம் கூறிக் கொண்டே இருந்துள்ளார். சிதம்பரம் பேசிய விதமும், அவரது நடவடிக்கையும் தன்னை அவமதிப்பதாக இருந்ததாக சுதீர் கிருஷ்ணா தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த கூட்டத்தில் பல துறைகளை சேர்ந்த செயலாளர்களும், நிதி அமைச்சகம் மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சக அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

#TamilSchoolmychoice

சுதீர் கிருஷ்ணாவின் ஆங்கிலத்தில் எந்தவொரு தவறும் இல்லை எனவும், புரிந்து கொள்வதற்கு கடினமாக இருக்கும் வகையில் சுதீரின் ஆங்கிலம் இல்லை எனவும் கூட்டத்தில் கலந்து கொண்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் சுதீர் ஒன்றும் ஆக்ஸ்போர்ட் ஆங்கில புலமை கொண்டவர் இல்லை எனவும், போதிய அளவு ஆங்கில அறிவு அவரிடம் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கூட்டம் முடிந்ததும் இச்சம்பவம் தொடர்பாக, சுதீர் கிருஷ்ணா நிதித்துறை அமைச்சக உயர் அதிகாரிகள் பலரிடமும் புகார் அளித்துள்ளார். தான் அவமானப்படுத்தப்பட்டது தொடர்பாக சிதம்பரம் மீது புகார் கடிதம் ஒன்றை அமைச்சர் கமல்நாத்திற்கு அனுப்பி உள்ளார். அக்கடிதத்தில், இந்த விவகாரத்தை பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறும், இது தொடர்பாக பிரதமர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார். சுதீர் கிருஷ்ணா, சிதம்பரம் மீது அளித்துள்ள புகார் குறித்து அமைச்சர் கமல்நாத்திடம் கேட்ட போது, செயலாளர் இந்த விவகாரம் தொடர்பாக தன்னை தொடர்பு கொள்ளவில்லை என தெரிவித்துள்ளார்.