Home உலகம் ஷூமேக்கரின் நுரையீரலில் தொற்று! கோமா நிலை மாறவில்லை!

ஷூமேக்கரின் நுரையீரலில் தொற்று! கோமா நிலை மாறவில்லை!

866
0
SHARE
Ad

60ef6818-6145-44cd-8a6e-7a88bff09602_S_secvpfகிரெநோபில், பிப். 13- உலகப் புகழ் பெற்ற பார்முலா-1 கார் பந்தய வீரரான மைக்கேல் ஷுமேக்கர்(45) ஜெர்மனி நாட்டைச் சேர்ந்தவர். இவர் தனது 19 வருட கார் பந்தய வாழ்க்கையில் ஏழு முறை உலகக் கோப்பையை வென்றுள்ளார். கடந்த 2012ஆம் ஆண்டில்தான் இவர் தொழில்முறைப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாத விடுமுறையைக் கழிக்க ஷுமேக்கர் தனது குடும்பத்தினருடன் பிரான்ஸ் தேசத்தின் ஆல்ப்ஸ் மலை அடிவாரத்திற்கு சென்றிருந்தார். அங்கு அம்மாதம் 29 ஆம் தேதி தனது மகனுடன் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த அவர் திடீரென்று சறுக்கியதில் பாறை மீது மோதி தலையில் பலத்த காயமடைந்தார்.

உடனடியாக கிரெநோபில் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்ட அவருக்கு தலையில் இரண்டு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. அதன் பின்னர் அவரது மூளையில் ஏற்பட்டுள்ள அழுத்தத்தினைக் குறைக்க வேண்டி மருத்துவர்கள் அவரை மருத்துவ கோமா நிலையில் வைத்தனர். இரண்டு வாரங்களுக்கு முன்னால் அவர் விழிப்பதற்காக மாத்திரைகளின் அளவைக் குறைக்க இருப்பதாகத் தெரிவித்திருந்த மருத்துவர்கள் அவர் கண் விழித்த பின்னரே அவருக்கு ஏற்பட்டுள்ள குறைபாடுகள் தெரியவரும் என்று குறிப்பிட்டனர்.

#TamilSchoolmychoice

இந்த நிலையில் அவருக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டுள்ளதாக ஜெர்மன் பத்திரிகை ஒன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது. நலிந்த நிலையில் உள்ள அவரது சுகாதார நிலைமைகள் குறித்து தெளிவாகத் தெரியவில்லை என்று அந்தப் பத்திரிகை குறிப்பிட்டிருந்தது. இந்த யூகங்கள் குறித்து கருத்து எதுவும் வெளியிடப்படுவதற்கு இல்லை என்று ஷுமேக்கரின் செய்தித் தொடர்பாளர் சபைன் கெம் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

ஷுமேக்கரின் உடல்நிலை குறித்து சிறிதளவு தகவல்களே வெளியிடப்படும் நிலையில் பல வதந்திகள் வெளிவருகின்றன. கடந்த வியாழக்கிழமை அன்று சமூக இணையதளங்களில், அவர் இறந்துவிட்டதாகப் பரபரப்பாகப் பரவிய செய்திகளை மருத்துவமனை மறுத்துள்ளது.