டிசம்பர் 30 – ஏழு முறை எஃப் -1 கார் பந்தய போட்டிகளில் உலகின் முதல் நிலை வெற்றியாளராக வென்று சாதனை படைத்த ஜெர்மனியின் மைக்கல் ஷூமேக்கர் நேற்று பிரான்ஸ் நாட்டின் ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் பனிச் சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்தபோது, தவறி விழுந்து, ஒரு பாறையில் மோதிய காரணத்தால் தலையில் கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்.
நினைவிழந்த நிலையில் மிகவும் ஆபத்தான கட்டத்தில் 44 வயதான அவர் இருப்பதாக செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
அவருடன் அவரது 14 வயது மகனும் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலையில் பாதுகாப்பு கவசத்தை ஷூமேக்கர் அணிந்திருந்தாலும் விபத்தின் போது ஒரு பாறையில் மோதியதால் அவருக்கு தலையில் கடுமையான காயங்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஹெலிகாப்டர் மூலம் 80 மைல்களுக்கு அப்பாலுள்ள மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார்.
அவரது உயிருக்கு ஆபத்து இல்லை என ஒரு சில தகவல்கள் தெரிவித்த வேளையில், சுய நினைவிழந்து, மிகவும் ஆபத்தான கட்டத்தில் இருக்கின்றார் என வேறு சில செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
2012ஆம் ஆண்டில் ஷூமேக்கர், கார் பந்தய போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார்.