டிசம்பர் 30 – நியாயமான, இரு தரப்புக்கும் பொதுவான விசாரணையை மேற்கொள்ளாமல் “த ஹீட்” வாரப் பத்திரிக்கையை தடை செய்ததன் மூலம் அரசாங்கம் நாட்டின் அரசியல் அமைப்பு சட்டத்தை மீறியுள்ளதாக வழக்கறிஞர் மன்றம் குற்றம் சாட்டியுள்ளது.
மலேசியாவில் பத்திரிக்கைச் சுதந்திரம் வேண்டும் என போராடும் பத்திரிக்கையாளர்களின் பக்கம் தாங்கள் நிற்பதாக கூறியுள்ள வழக்கறிஞர் மன்றத்தின் தலைவர் கிறிஸ்தோபர் லியோங் (படம்) “த ஹீட்” விவகாரத்தில் 1984ஆம் ஆண்டின் அச்சகம் மற்றும் பதிப்புகளுக்கான சட்டத்தை அரசாங்கம் அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும் அந்த பத்திரிக்கையின் சொத்துக்களைப் பறிமுதல் செய்ததும் தவறு என்றும் மேலும் தெரிவித்துள்ளார்.
ஹீட் பத்திரிக்கையைத் தடை செய்வதற்கு முன்னால், முறையான விசாரணையின் மூலம் தக்க பதிலளிப்பதற்கு அவர்களுக்கு வாய்ப்பு அளித்திருக்க வேண்டும் என்றும் கிறிஸ்தோபர் லியோங் பத்திரிக்கைகளுக்கு விடுத்த அறிக்கையொன்றில் கூறினார்.
“காலவரையற்ற தடையை விதித்திருப்பதன் மூலம் அது அந்தப் பத்திரிக்கையை நிரந்தரமாக தடை செய்வதற்கு ஒப்பானதாகும். இதன் காரணமாக, நாட்டின் அரசியல் அமைப்பின் (Federal Constitution) 13வது விதியை அரசாங்கம் மீறியுள்ளது. இந்த விதியின்படி சட்டவிதிப்படிதான் ஒருவரின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும்” என்றும் கிறிஸ்தோபர் லியோங் கூறியுள்ளார்.
அச்சகம் மற்றும் பதிப்பகங்களுக்கான 1984ஆம் ஆண்டின் சட்டம் அதிகார துஷ்பிரயோகம் செய்யப்படுவதால், இன்றைய நவீன காலகட்டத்திற்கு ஒவ்வாத நடைமுறைகளைக் கொண்ட இந்த சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் வழக்கறிஞர் மன்றத்தின் தலைவர் கிறிஸ்தோபர் லியோங் அறைகூவல் விடுத்துள்ளார்.
ஹீட் மீது மேற்கொண்ட நடவடிக்கையின் மூலம் தனக்கு எதிர்ப்பான கருத்து தெரிவிப்பவர்களை அடக்குவதற்கு நஜிப் முயற்சி செய்கின்றாரா என்றும் கேள்வி எழுப்பியுள்ள கிறிஸ்தோபர் லியோங் அதற்காக பத்திரிக்கைகள் எதை வேண்டுமானாலும் எழுதலாம் என்ற கொள்கையை தான் ஆதரிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.