தேசிய முன்னணியின் கூட்டணி கட்சிகளில் ‘7-11’ கட்சியான மசீச வை விட இனவாதம் நிறைந்த பெர்காசாவிற்கு தான் செல்வாக்கு அதிகம் என்றும் கிட் சியாங் குறிப்பிட்டுள்ளார்.
‘7-11’ என்பது பல்பொருள் அங்காடி என்றாலும் கூட, அதை வைத்து மசீச வை கேலி செய்துள்ளார் கிட் சியாங். காரணம் மே 5 பொதுத்தேர்தலில் போட்டியிட்ட 11 மாநிலங்களில் 7 நாடாளுமன்ற தொகுதிகளில் மட்டுமே மசீச வெற்றி பெற்றதால் அதை குறிப்பிட்டு கிட் சியாங் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும், பெர்காசாவிற்கு தேசிய முன்னணி நிதியுதவி செய்வது மற்ற கூட்டணிக் கட்சிகளுக்கு தெரியுமா? அல்லது அரசாங்கம் நிதியளிப்பது மறைக்கப்பட்டுள்ளதா? என்றும் கிட் சியாங் கேள்வி எழுப்பியுள்ளார்.
அது பொது நிதியாக இருந்தால், அது குறித்து அரசாங்கம் விளக்கமளிக்க வேண்டும் என்றும், தேசியப் பாதுகாப்புக் குழு ( National Security Council), தேசிய அரசாங்கப் பணியகம் (National Civics Bureau) மற்றும் சிறப்பு விவகாரத்துறை (Special Affairs Department) ஆகியவற்றை தவிர வேறு ஏதாவது முகவர்கள் நிதியளிக்கிறார்களா என்பது தெரியவேண்டும் என்றும் கிட் சியாங் தெரிவித்துள்ளார்.
கடந்த டிசம்பர் 22 ஆம் தேதி பெர்காசாவின் ஆண்டுக்கூட்டத்தில் பேசிய இயக்கத் தலைவர் இப்ராகிம் அலி, மலாய்காரர்களின் பிரச்சனைகளை தீர்க்காமல், அரசாங்கம் பலவீனமாகவும், பல் இல்லாமலும் தொடர்ந்து இருக்குமானால் அம்னோவிற்குப் பதிலாக பெர்காசா உருமாறும் என்று எச்சரிக்கை விடுத்தார்.
அவரைத் தொடர்ந்து, தேசிய முன்னணிக்கு ஆதரவாக மலாய் மக்களை ஒன்று திரட்டுவதால் பெர்காசா இயக்கத்திற்கு அரசாங்க முகவர்கள் நிதி வழங்குவதாக அவ்வியக்கத்தின் பொதுச்செயலாளர் சையத் ஹஸ்ஸான் சையத் ஒப்புக்கொண்டார்.
இதனால் தற்போது தேசிய முன்னணி கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே கடுமையான சர்ச்சை எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.