Home வணிகம்/தொழில் நுட்பம் வணிகத்திலும் அரசராகத் திகழும் ஜோகூர் சுல்தான்!

வணிகத்திலும் அரசராகத் திகழும் ஜோகூர் சுல்தான்!

889
0
SHARE
Ad

Joh-Sultan-300-X-200டிசம்பர் 29 – மலேசியாவின் மாநில சுல்தான்களில் பதவியேற்ற காலம் முதல் வித்தியாசமான சுல்தானாக உருவெடுத்து வருபவர் மதிப்பிற்குரிய ஜோகூர் சுல்தான், துங்கு இப்ராகிம் இஸ்மாயில் ஆவார்.

#TamilSchoolmychoice

நிறைவை நாடும் நடந்து முடிந்த ஆண்டில், தான் எடுத்த சில  வணிக முடிவுகளினால் நாட்டின் மிகப் பெரிய வணிக சாம்ராஜ்யத்தை கொண்டுள்ள சுல்தானாக ஜோகூர் சுல்தான் திகழ்கின்றார்.

2012ஆம் ஆண்டு விடுக்கப்பட்ட ஓர் அறிவிப்பின் வழி, சிங்கப்பூரின் கோடீஸ்வர பிரமுகர்களில் ஒருவரான பீட்டர் லிம் என்பவரோடு இணைந்து ஜோகூர் சுல்தான், 2 பில்லியன் சிங்கப்பூர் வெள்ளி மதிப்புடைய – மருத்துவமனை, தங்கும் விடுதிகள், அடுக்குமாடி குடியிருப்பு, உல்லாச கேளிக்கை மையங்களைக் கொண்ட – ஒரு மாபெரும் திட்டத்தை ஜோகூர் பாருவில் நிர்மாணிக்க உள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த ஆண்டு மற்றொரு வணிக விற்பனையின் மூலம் ஜோகூர் சுல்தான் வணிகப் பத்திரிக்கைகளில் தலைப்புச் செய்தியானார்.

ஜோகூர் பாரு நகரின் மைய வர்த்தகப் பகுதியில் தனக்கு சொந்தமான 47 ஹெக்டர் நிலத்தை சீன நாட்டு மேம்பாட்டு நிறுவனம் ஒன்றுக்கு மலேசிய ரிங்கிட் 4.5 பில்லியனுக்கு இந்த ஆண்டு விற்பனை செய்திருக்கின்றார் ஜோகூர் சுல்தான்.

பழைய சுங்கவரி, குடிநுழைவு மையங்களுக்கு அருகில் இருக்கும் இந்த நிலம் சிங்கப்பூரை எதிர்நோக்கி உள்ளதால் இதன் மதிப்பு மிகப் பெரியது என்றும் கூறப்படுகின்றது.

இந்த விற்பனையின் மூலம் கிடைத்த பெரிய தொகையைக் கொண்டு மற்ற சில வணிக பேரங்களிலும் முதலீடுகளிலும் ஜோகூர் சுல்தான் தற்போது ஈடுபட்டு வருகின்றார்.

பெர்ஜாயா டைம்ஸ் வணிக வளாகத்திலும் முதலீடு

இதற்கிடையில் அண்மையில் கோலாலம்பூரின் மையப் பகுதியில் உள்ள பெர்ஜாயா டைம்ஸ் வணிக வளாகத்தில் 20 சதவீத பங்குகளை வாங்கி, அதில் முதலீடு செய்திருப்பதன் மூலம் நாட்டின் மற்றொரு பிரபல கோடீஸ்வர வணிகரான டான்ஸ்ரீ வின்சென்ட் டானுடனும் வணிக ரீதியாக ஜோகூர் சுல்தான் கை கோர்த்திருக்கின்றார்.

ஜோகூர் பாருவின் இஸ்கண்டார் வாட்டர் ஃபிரண்ட் (Iskandar Water Front) என்ற மாபெரும் திட்டத்தை ஜோகூர் மாநில அரசாங்கத்துடன் இணைந்து உருவாக்கி வரும் மற்றொரு கோடீஸ்வரரான டான்ஸ்ரீ லிம் காங் ஹூ என்பவருடனும் ஜோகூர் சுல்தான் வணிக ரீதியாக இணைந்திருக்கின்றார்.

கடந்த வாரத்தில் ஜோகூர் பாரு நகரின் மையப் பகுதியில் உள்ள மற்றொரு நிலத்தை வாட்டர் ஃபிரண்ட் நிறுவனம் மிகப் பெரிய தொகைக்கு விற்பனை செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையில், ஜோகூர் மாநில அரசாங்கத்தின் முதலீட்டு நிறுவனமான ஜேகோர்ப் (J Corp) என்ற பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனத்தை மறு சீரமைப்பு செய்வதிலும், அதன் முதலீட்டுக்களைப் பெருக்குவதிலும் ஜோகூர் சுல்தான் தனது கவனத்தைச் செலுத்தி வருகின்றார்.

வித்தியாச சுல்தான்…

மற்ற பல அம்சங்களிலும் மலேசியாவின் சுல்தான்களில் வித்தியாசமானவராகத் திகழ்ந்து வருகின்றார் ஜோகூர் சுல்தான்.

இவரது மூத்த மகன் துங்கு இஸ்மாயிலை இள வயதிலேயே டேராடூனில் உள்ள இந்தியாவின் முன்னணி இராணுவக் கல்லூரிக்கு அனுப்பி அங்கு இராணுவப் பயிற்சி பெற வைத்தவர் இவர். பின்னர் துங்கு இஸ்மாயில் இந்திய இராணுவத்தில் அதிகாரியாகப் பணியாற்றினார் என்பதும்,‘கேப்டன் என்ற உயர் பதவியை இந்திய இராணுவத்தில் வகித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்திய இராணுவத்தில் பணியாற்றிய மலேசியாவின் முதல் அரச வம்ச பிரமுகர் ஜோகூர் சுல்தானின் மகன்தான்!

2007ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தியாவின் குடியரசு தின அணிவகுப்பில் இந்திய இராணுவத்தின் படைக் குழு ஒன்றுக்கு தலைமை தாங்கி,  அப்போதைய இந்திய அதிபர் அப்துல் கலாம் முன்னிலையில் அணிவகுத்துச் சென்றவர் துங்கு இஸ்மாயில்.

இவ்வாறு வெளிநாட்டு குடிமகன் ஒருவர்,  இந்திய இராணுவக் குழுவுக்கு குடியரசு தின அணிவகுப்பில்  தலைமை தாங்கியது அதுதான் முதல் முறை. அந்த சரித்திரபூர்வ நிகழ்வை நேரடியாகக் கண்டு களிக்க புதுடில்லி சென்று இந்திய இராணுவத்தின் குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொண்டவர் இன்றைய ஜோகூர் சுல்தான்.

அது மட்டுமல்ல! அரச வம்சத்தினரில் இரயில் வண்டியை இயக்கும் அனுமதி (லைசென்ஸ்) வைத்திருக்கும் ஒரே சுல்தான் ஜோகூர் சுல்தான்தான். பல தருணங்களில் சொந்தமாக இரயில் வண்டியை அவர் செலுத்தியிருக்கின்றார்.

2014ஆம் ஆண்டில் என்ன செய்யப் போகின்றார் ஜோகூர் சுல்தான்?

எதிர்வரும் 2014ஆம் ஆண்டில் மேலும் சில முக்கியமான வணிக பேரங்களிலும், முதலீடுகளிலும் ஈடுபட்டு மலேசியாவின் வணிக சூழ்நிலையில் ஒரு முக்கிய பங்கை ஜோகூர் சுல்தான் வகிப்பார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகின்றது.

சிங்கப்பூருக்கும், கோலாலம்பூருக்கும் இடையில் அமையவிருக்கும் அதிவேக துரித இரயில் தொடர்பை உருவாக்குவதிலும், முதலீடு செய்வதிலும் ஜோகூர் சுல்தான் முக்கிய பங்கை வகிப்பார் என்று தெரிகின்றது.

கிம்மாஸ் நகருக்கும் ஜோகூர் பாருவுக்கும் இடையில் அமைக்கப்படவிருக்கும்  மின்சார இரயில் பாதையின் நிர்மாணிப்பிலும் ஜோகூர் சுல்தான் வணிக ரீதியாக முக்கிய பங்கு வகிப்பார் என்ற ஆரூடங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

ஆக, 2014ஆம் ஆண்டில் ஜோகூர் சுல்தானின் மேலும் சில அதிரடி வணிக அறிவிப்புக்கள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

-இரா.முத்தரசன்