Home நாடு மாமன்னரின் முதல் நாடாளுமன்ற உரையைக் கேட்க நாடு தயாராகிறது!

மாமன்னரின் முதல் நாடாளுமன்ற உரையைக் கேட்க நாடு தயாராகிறது!

371
0
SHARE
Ad

கோலாலம்பூர் : நாளை திங்கட்கிழமை 2024 ஆம் ஆண்டுக்கான முதலாவது நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குகிறது. இந்த கூட்டத் தொடரை மாமன்னர் உரையாற்றி தொடக்கி வைப்பது மரபு.

அந்த வகையில் கடந்த ஜனவரி 31-ஆம் தேதி மாமன்னராக பதவி ஏற்றுக்கொண்ட ஜோகூர் ஆட்சியாளர் சுல்தான் இப்ராகிம் முதன்முறையாக தனது நாடாளுமன்ற உரையை நிகழ்த்தவிருக்கிறார்.

#TamilSchoolmychoice

பொதுவாக இத்தகைய மாமன்னரின் நாடாளுமன்ற உரைகள் ஆளும் அரசாங்கத்தின் கொள்கை, செயலாக்க திட்டங்களின் பிரதிபலிப்பாகத்தான் இருக்கும் என்பதுதான் மரபு.

இருப்பினும் மாமன்னரின் சொந்த கருத்துகளும் அவ்வப்போது இடம்பெறுவது வழக்கம். அந்த வகையில் மாமன்னர் உரை நிகழ்த்தவிருக்கும் இந்த முதலாவது நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் அவர் என்ன கூறவிருக்கிறார் என்பது குறித்து தெரிந்து கொள்ள பொதுமக்களும் அரசியல் பார்வையாளர்களும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

ஜோகூர் சுல்தானாக, தன் பதவி காலத்தில் அவ்வப்போது பல துணிச்சலான – மற்ற மலாய் ஆட்சியாளர்கள் கூறத் தயங்கும் விவகாரங்களை – அச்சமின்றி முன்வைத்தவர் இன்றைய மாமன்னர். குறிப்பாக ஊழல் ஒழிப்பு, பொதுமக்கள் நலன் போன்ற அம்சங்களில் அவரின் கருத்துக்கள் கடந்த காலங்களில் பகிரங்கமாக வெளிப்பட்டிருக்கின்றன.

மாமன்னராக அவர் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் என்ன கூற போகிறார் என்பது அடுத்த சில நாட்களுக்கு மக்களிடையே விவாத பொருளாக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.