Home Photo News தமிழ் நாட்டில் திமுக கூட்டணி உடையுமா? அதிமுக கூட்டணியில் யார்?

தமிழ் நாட்டில் திமுக கூட்டணி உடையுமா? அதிமுக கூட்டணியில் யார்?

410
0
SHARE
Ad

(இந்தியப் பொதுத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், அந்தத் தேர்தல் களம் குறித்த தன் அரசியல் பார்வையை வழங்குகிறார் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன்)

*திமுக கூட்டணியில் புதிய கட்சிகள் இணையுமா? இணைந்திருக்கும் கட்சிகள் பிரியுமா?

*அதிமுக அமைக்கப் போகும் மெகா கூட்டணியில் யார்?

*ஓபிஎஸ் – தினகரன் – சசிகலா நிலைப்பாடு என்ன?

#TamilSchoolmychoice

*சீமான் ஆட்டத்தைக் கலைப்பாரா?

*பாஜகவின் 3-வது அணியில் சேரப் போவது யார்?

இந்திய பொதுத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. பிரச்சாரத் தாக்குதல்களின் அனல் வெப்பம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. அதிலும் தேர்தல் நடைபெறப் போகும் ஏப்ரல் – மே – மாதங்களில் கோடை காலத்தின் தாக்கம் உச்சத்தில் இருக்கும். உள்ளேயும் வெப்பம், வெளியேயும் வெப்பம் என, இந்திய அரசியல் களம் சூடு காணவிருக்கிறது. தொடர்ந்து சுவாரசியங்கள், திருப்பங்கள் நிகழப் போகின்றன.

இந்தியப் பொதுத் தேர்தல் குறித்த முக்கிய அரசியல் பார்வைகளை வழங்கவிருக்கும் இந்தக் கண்ணோட்டத் தொடரில் தமிழ் நாடு தொடங்கி மற்ற முக்கிய மாநிலங்கள், அரசியல் கட்சிகள் குறித்த கள நிலவரங்களின் விவரிப்புகள் இடம் பெறும்.

முதலில் நமது தமிழ் நாட்டைப் பார்ப்போம்!

திமுக கூட்டணியின் நிலைப்பாடு மீண்டும் வெற்றியைத் தருமா?

பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கையிலெடுத்து, அதன் காரணமாக முஸ்லீம், கிறிஸ்துவ சிறுபான்மை இனத்தவர்களின் ஆதரவுடன் 38 தொகுதிகளை 2019 பொதுத் தேர்தலில் வெற்றி கொண்டது திமுக கூட்டணி. திமுகவின் பரம வைரியான அதிமுக கூட்டணி, பாஜகவுடன் அப்போது இணைந்திருந்தது திமுகவின் சாடல்களுக்கு மேலும் வசதியாகப் போனது.

2019 பொதுத் தேர்தலில் 38 தொகுதிகளை வெற்றி கொண்டது திமுக கூட்டணி. தேனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திர நாத் மட்டும் வெற்றி பெற்றார்.

அதே சாதனையை திமுக மீண்டும் நிகழ்த்துமா என்பது கேள்விக் குறிதான்! காரணம், இந்த முறை காட்சிகள் முற்றாக மாறியிருக்கின்றன. பாஜகவின் வாக்கு வங்கி அண்ணாமலையின் வருகையாலும், இந்துத்துவா பிரச்சாரத்தாலும் அதிகரித்திருப்பதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

அயோத்தியாவில் நிர்மாணிக்கப்பட்ட ராமர் ஆலயத்தின் திருவுருவச் சிலை

அயோத்தியாவில் ராமர் ஆலயத்தை நிர்மாணித்திருப்பது பாஜக இந்து வாக்காளர்களை ஈர்ப்பதற்கான இன்னொரு காரணம்.

பாஜகவில் இருந்து பிரிந்து விட்ட அதிமுக பக்கம், முஸ்லீம் கட்சிகள் உள்ளிட்ட சில சிறுபான்மை கட்சிகள் சாய்ந்திருக்கின்றன.

எனினும் திமுக கூட்டணியில் இதுவரை சலசலப்போ, ஏதாவது கட்சிகள் வெளியேறுமோ என்ற அச்சமோ காணப்படவில்லை. தொகுதிகள் ஒதுக்கீட்டில் திமுக கடுமை காட்டுவதாகவும் இதனால் ஓரிரு கட்சிகள் கூட்டணியில் இருந்து வெளியேறலாம் என்ற தகவல்களும் எழுந்திருக்கின்றன.

காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக இணைந்த திமுக கூட்டணிக் களம் இன்னும் வலுவுடன் திகழ்கிறது. தொகுதிகள் ஒதுக்கீட்டு பேரத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டால் இன்றைய நிலையில் வலுவான கூட்டணித் தலைமையை திமுகவே கொண்டிருக்கும்.

திமுகவுக்கு இந்த முறை 2 சவால்கள். முதலாவது அதிமுக, பாஜகவுடன் உறவை முறித்துக் கொண்டு தனியாகவோ – கூட்டணியாகவோ – களம் காணவிருப்பது!

இரண்டாவது, திமுக முன்னெடுக்கும் இந்தியா கூட்டணியில் கட்சிகளுக்கிடையே தொடர்ந்து வரும் மோதல்கள், சிக்கல்கள்! அதில் திமுகவும் சிக்கிக் கொண்டு தடுமாறிக் கொண்டிருக்கிறது. போதாக்குறைக்கு உதயநிதியின் சனாதன தர்ம கருத்து வடநாட்டில் உள்ள கட்சிகளிடையே எதிர்ப்பலைகளை தோற்றுவித்திருக்கிறது.

திமுகவுடன் இணைந்த கூட்டணியில் இருந்தால், பாஜகவினரின் பிரச்சாரத் தாக்குதல் தங்கள் பக்கம் திரும்பலாம் – இந்து வாக்குகள் கிடைக்காமல் போகலாம் – என வட நாட்டின் மாநிலக் கட்சிகள் தயங்குகின்றன.

திமுக, தமிழ் நாட்டில் தனது கூட்டணியை இதுவரை தக்க வைத்துக் கொண்டிருப்பது அதன் சாதகம் என்றால், மேற்குறிப்பிட்ட அம்சங்கள் திமுகவுக்கு பின்னடைவுகள்!

அதிமுக கூட்டணி பக்கம் யார்? யார்?

அதிமுக கூட்டணியில் யாரும் சேரமாட்டார்கள் என திமுக பிரச்சாரம் செய்தாலும் இரண்டு கட்சிகள் அதிமுகவுடன் கைகோப்பது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது.

முதலாவது பா.ம.க! கூட்டணி அமைத்துத்தான் போட்டி என அறிவித்து விட்டது. பாமக கண்டிப்பாக திமுக பக்கம் செல்ல முடியாது. காரணம் தெரிந்ததுதான்! பாமகவோ, பாஜகவோ இருக்கும் கூட்டணியில் நாங்கள் இருக்க மாட்டோம் என்பது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) தலைவர் தொல்.திருமாவளவனின் தெளிவான நிலைப்பாடு!

எனவே, திமுக, பாமகவுடன் கூட்டணி வைத்தால் விசிக வெளியேறும் என்பதால் திமுக அந்தத் அபாயகரமான தவறைச் செய்ய வாய்ப்பில்லை.

பாமகவுக்கு இருக்கும் இன்னொரு வாய்ப்பு பாஜக அணியில் சேர்வது. அந்த முடிவை பாமக எடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. காரணம், கூடுதல் தொகுதிகள் போட்டியிடக் கிடைக்கக் கூடும். ராஜ்யசபா என்னும் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை பாஜக அன்புமணி ராமதாசுக்கு ஏற்பாடு செய்து வழங்கலாம்.

விஜய்காந்த் மறைவால் கட்சிக்கு எழுச்சியா?

‘செத்தும் கொடுத்தான் சீதக்காதி’ என்ற பழமொழி, விஜய்காந்த் மறைவால் அவரின் தேமுதிக கட்சிக்கு எழுச்சியைத் தரலாம். அவரின் இறுதி ஊர்வலமும் இரண்டு மூன்று நாட்களாக அவரைப் பற்றி வெளியிடப்பட்ட அவரின் கடந்த கால நற்செயல்களும் தமிழ் நாட்டில் அவரைப் பற்றி அவ்வளவாக தெரியாதவர்களுக்கு கூட அவர் மீதான அபிமானத்தையும், மரியாதையையும் ஏற்படுத்தியிருக்கிறது.

ஆனால் அந்த நன்மதிப்பு நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குகளாக மாறுமா? விஜய்காந்த் மனைவி பிரேமலதா சரியான முறையில் காய்களை நகர்த்தினால், அதிமுக கூட்டணியில் இடம் பெறலாம். விஜய்காந்த் மகன் போட்டியிட்டு வெற்றி பெறலாம்.

தமிழ் மாநிலக் காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் மட்டும் இன்னும் தடுமாறிக் கொண்டிருக்கிறார்.  மாநிலங்களவை உறுப்பினர் பதவியைப் பெற்றுத் தந்த நரேந்திர மோடி பக்கம் சாய்வதா? – வெற்றி வாய்ப்புள்ள அதிமுக பக்கம் சாய்வதா? என்ற குழப்பத்தில் இருக்கிறார்.

சீமான் ஆட்டத்தைக் கலைப்பாரா?

தமிழ் நாட்டு அரசியல் ஆட்டத்தையே கலைத்து – திசை திருப்பும் – முடிவு சீமானின் கையில் வந்து சேர்ந்திருக்கிறது. அதிகரித்துக் கொண்டே போகிறது அவரின் வாக்கு வங்கி விழுக்காடு. ஆனாலும் மனிதர் தனியாகத்தான் நிற்பேன் என விடாப்படியாகக் கூறிவருகிறார்.

அவர் திமுக பக்கம் செல்ல முடியாது. அரசியல் முரண்பாடுகள் சீமானுக்கு அங்கே அதிகம். அவர் மட்டும் அதிமுகவுடன் கூட்டணி வைக்கும் முடிவை எடுத்தால்?

தமிழ் நாடு அரசியலின் ஆட்டமே மாறிவிடும். கலகலப்பும், உற்சாகமும் அரசியல் களத்தில் அதிகரிக்கும். நடக்குமா?

ஓபிஎஸ்-தினகரன்-சசிகலா மூன்று கோண அரசியல் சிக்கல்

எப்போதுமே குழப்ப அரசியலை முன்னெடுக்கும் ஓ.பன்னீர் செல்வம் நாடாளுமன்றத் தேர்தலில் இன்னொரு குழப்பத்தில் சிக்கியிருக்கிறார். அவருக்கு கட்சியில்லை. அதனால் பாஜகவுடன் கூட்டணி சேர முடியாது. ஒன்று பாஜகவுடன் நேரடியாக இணையலாம். அல்லது பாஜக சார்பில் போட்டியிடலாம். சுயேட்சையாகவும் போட்டியிடலாம்.

அவரின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத்துக்கு மீண்டும் தேனி நாடாளுமன்றத் தொகுதியைப் பெற்றுத்தர ஓபிஎஸ் கண்டிப்பாக முயற்சி செய்வார். எந்தக் கட்சியின் மூலம் என்பதுதான் கேள்வி!

சசிகலாவும் யாருக்கும் பிரச்சாரம் செய்யாமல், தேர்தல் முடிவுகளைப் பார்த்து விட்டு அடுத்த கட்ட நகர்வுகளை மேற்கொள்ளலாம்.

தெளிவாக இருப்பவர் தினகரன்தான்! கையில் கட்சி இருக்கிறது. பாஜகவுடன் கூட்டணி வைப்பதன் மூலம் தன் மீதான வழக்கு விவகாரங்களை அவரால் தீர்த்துக் கொள்ள முடியும். இல்லாவிட்டால் தனித்துப் போட்டியிட்டு தென் மாவட்டங்களில் அதிமுகவின் வெற்றி வாய்ப்பைக் குலைப்பார். அதன் மூலம் முக்கியத்துவம் பெறுவார்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 3 அணிகள் மோதப் போகின்றன என்பது தெளிவாகிவிட்டது. திமுக, அதிமுக, பாஜக தலைமையிலான அந்த 3 கூட்டணிகளின், அடுத்தடுத்த பரபரப்பு அரசியல் காட்சிகளுக்குக் காத்திருப்போம்!

-இரா.முத்தரசன்