கோலாலம்பூர், டிச 28 – ‘த ஹீட்’ வார இதழ் முடக்கப்பட்டதற்கு எதிராக தேசிய பத்திரிக்கையாளர் சங்கம் (National Union of Journalists – NUJ) போராட வேண்டும் என்பதோடு, இணையப் பத்திரிக்கை நிரூபர்களையும் பாதுகாத்து, பத்திரிக்கை சுதந்திரத்தை நிலை நாட்ட வேண்டும் என்று முன்னாள் தேசிய பத்திரிக்கையாளர் சங்க பொதுச்செயலாளர் வி.அன்பழகன் கூறியுள்ளார்.
கோலாலம்பூரில் நேற்று இரவு நடைபெற்ற பத்திரிகையாளர்கள் கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்ட அவர், மலேசியாவில் பத்திரிக்கை சுதந்திரத்தைப் பாதுகாக்க எழுப்பும் குரல்களுக்கு சங்க உறுப்பினர்கள் அந்த அளவிற்கு ஆதரவு தருவதில்லை என்று குறிப்பிட்டார்.
“தேசிய பத்திரிக்கையாளர் சங்கத்தில், தற்போது அச்சுப் பதிப்பகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே பெரும்பான்மையாக உள்ளார்கள். இணைய பத்திரிக்கைகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் இதில் அதிகளவு இல்லை. மலேசிய இணையப் பத்திரிக்கையாளர்கள் தான் இதற்கான முயற்சிகளை செய்து பத்திரிக்கை சுதந்திரம் கிடைக்கப் போராட வேண்டும் என்பதை நான் மலேசியன் இன்சைடர் பத்திரிக்கையில் சேர்ந்த பிறகு உணர்ந்து கொண்டேன்.” என்று அன்பழகன் தெரிவித்தார்.
கெராம் (Geramm- Movement of Angry Media) ஆத்திரம் கொண்ட ஊடகம் என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்த கருத்தரங்கில், மலேசியாகினி நிறுவனர் ஸ்டீவன் கான், பிரீ மலேசியா டுடே தலைமை செய்தியாளர் ஜி.வினோத், ரிப்போர்ட்டர்ஸ் வித்தவுட் பார்டர் என்ற பத்திரிக்கையைச் சேர்ந்த ஹாட்டா வஹாரி, ஊடகப் போராளி மஸ்ஜாலிசா ஹம்ஸா மற்றும் ஓவியர் ரோனா சினா ஆகியோர் கலந்து கொண்டனர்.
‘த ஹீட்’ வார இதழ் முடக்கத்திற்கு எதிராக வரும் ஜனவரி 4 ஆம் தேதி போராட்டம் நடத்தவுள்ளதாக கெராம் அறிவித்துள்ளது.
இந்த போராட்டத்திற்கு ‘ரெட் பென்சில்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் கலந்து கொள்பவர்கள், தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கும் விதமாக பென்சிலை உடைப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.