Home உலகம் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் ஷூமேக்கர்! நிலைமையைக் கூற மருத்துவர்கள் மறுப்பு!

உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் ஷூமேக்கர்! நிலைமையைக் கூற மருத்துவர்கள் மறுப்பு!

737
0
SHARE
Ad

5178054-3x2-700x467_7டிசம்பர் 30 – மைக்கல் ஷூமேக்கர் என்ற  கார் பந்தய வீரர் ஒவ்வொரு முறையும் எஃப் – 1 பந்தயத்தில் கலந்து கொள்ளும் போது, உலகெங்கிலும் உள்ள விளையாட்டு ஆர்வலர்கள் தங்களின் தொலைக்காட்சிப் பெட்டியிலேயே தங்களின் கண்கள் நிலைகுத்தி நிற்க பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

#TamilSchoolmychoice

அவர்களின் எதிர்பார்ப்பைப் பொய்யாக்காமல், பல முறைகள் முதல் நிலைக்கு வந்து அதிவேக கார் பந்தயத்தில் நான்தான் வெற்றி வீரன் என சொல்லாமல் சொல்லிக் கொண்டிருந்தவர் ஷூமேக்கர்.

ஆனால் விதி அவரது வாழ்க்கையில் எப்படி விளையாடியிருக்கிறது என்று பாருங்கள்!

இப்போதும் அதே போன்று உலகம் முழுவதும் வியாபித்துள்ள அவரது இரசிகர்கள், தொலைக்காட்சி செய்திகளையும், இணையத் தகவல் ஊடகங்களையும் உற்று கண்காணித்துக் கொண்டிருக்கின்றார்கள், அவரது உடல் நிலை எப்படி இருக்கின்றது என்பதைத் தெரிந்து கொள்ள!

எத்தனையோ ஆபத்தான கார் பந்தய தடங்களை வெற்றிகரமாகத் தாண்டியவர், செங்குத்தான, குறுகிய வளைவுகளில் இலாவகமாக தனது பந்தயக் காரை ஓட்டி பார்ப்பவர்களை பரபரப்படையச் செய்தவர், ஆபத்துக்கள் நிறைந்த கார் பந்தய விளையாட்டை ஆண்டுக் கணக்கில் அனாயசமாகக் கடந்து வந்தவர், இப்போது சாதாரண பனிச் சறுக்கு விளையாட்டில் ஜாலியாக ஈடுபட்டிருந்த போது தவறி விழுந்து தலையில் அடிபட்டு மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பது விதியென்றுதான் சொல்ல வேண்டும்.

மரணம் எப்படி வேண்டுமானாலும் வரும், என்பதற்கு உதாரணமாக ஓர் உண்மைக் கதை சொல்வார்கள்.

ஒரு பீப்பாய்க்குள் அமர்ந்து கொண்டு நயாகரா நீர்வீழ்ச்சியில் இருந்து உருட்டி விடப்பட்டு, எந்தவித ஆபத்தும் இல்லாமல் வெளியே வந்த ஒருவன், பின்னாளில் ஒருமுறை சாலையில் நடந்து கொண்டிருந்தபோது, வாழைப்பழத் தோல் மீது கால்வைத்து வழுக்கி விழுந்து மரணமடைந்தான் என்பார்கள்.

அதே போன்றதொரு நிலைமையில் தற்போது சிக்கிக் கொண்டிருக்கும் ஷூமேக்கர் மிகவும் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக அவரது மருத்துவர்கள் கூறி வருகின்றார்கள். ஆனால், அவரது உண்மையான உடல் நிலை குறித்து இதுவரை தெளிவான விளக்கம் தர அவர்கள் முன்வரவில்லை.

தற்போது சுய நினைவிழந்த நிலையில் இருந்து வரும் ஷூமேக்கர் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதாகவும், அவருக்கு நினைவு திரும்பி கண் திறந்தால் மட்டுமே அடுத்த அவரால் முன்பு போல் நடமாட முடியுமா என்று கருத்து தெரிவிக்க முடியும் என்றும் தெரிவித்திருக்கின்றார்கள்.

தற்போது பிரான்ஸ் நாட்டின் கிரெநோபல் (GRENOBLE)என்ற நகரில் உள்ள மருத்துவமனையில் ஷூமேக்கர் சிகிச்சை பெற்று வருகின்றார். அவருக்கு மூளையில் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.

எத்தனையோ பாதுகாப்பு அம்சங்களோடு கார் பந்தயங்களில் கலந்து கொண்டவர், பனிச் சறுக்கு விளையாட்டின் போதும் தலைக்கவசம் அணிந்தே இருந்திருக்கின்றார்.

ஆனால், தவறி விழுந்த போது ஒரு பாறையில் பலமாக மோதிய காரணத்தால் அவருக்கு தலையில் கடுமையான காயங்கள் ஏற்பட்டிருக்கின்றன.

ஏற்கனவே, சில முறை விபத்துக்களில் சிக்கி கடுமையான காயங்களுக்கு ஷூமேக்கர் இலக்காகியிருக்கின்றார். 1999ஆம் ஆண்டில் ஒரு கார் பந்தயத்தில் தனது காலை முறித்துக் கொண்டவர், 2009ஆம் ஆண்டில் ஸ்பெயின் நாட்டில் ஒரு மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி கழுத்து மற்றும் முதுகெலும்பு பகுதிகளில் கடுமையான காயங்களைச் சந்தித்தார்.

இப்போதோ, பனிச்சறுக்கு விளையாட்டில்!

உலகம் முழுவதும் உள்ள அவரது சக கார் பந்தய வீரர்களும், அவரது இரசிகர்களும், அவர் உடல் நலம் பெற்றுத் திரும்ப அவருக்கு வாழ்த்துச் செய்திகளை அனுப்பிக் கொண்டிருக்கின்றார்கள்.

நாமும் பிரார்த்திப்போம்!

-இரா.முத்தரசன்