பாரிஸ், ஜூன் 16 – ஃபோர்முலா ஒன் எனப்படும் அதிவேக கார் பந்தய வீரரான மைக்கல் ஷூமேக்கர் மருத்துவ உலகில் நிகழ்ந்த அதிசயமாக நீண்ட காலமாக சுய நினைவிழந்த நிலையில் இருந்து மீண்டு வந்துள்ளார்.
2013ஆம் ஆண்டு இறுதியில் பனிச் சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்தபோது கீழே விழுந்து தலையில் அடிபட்ட நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
கடந்த 6 மாத காலமாக சுய நினைவிழந்த (coma) “கோமா” நிலையில் இருந்த அவர் இன்று திங்கட்கிழமை பிரான்ஸ் நாட்டின் மருத்துவமனையில் இருந்து சுவிட்சர்லாந்து நாட்டின் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் அவர் அடுத்த கட்ட நிலைக்கு முன்னேறுவதற்கு நீண்ட காலம் பிடிக்கும் என்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தனது உடல் நலத்தை முழுமையாக குணப்படுத்தும் அடுத்த கட்ட – நீண்ட கால சிகிச்சைக்காக அவர் தயார்ப்படுத்தப்பட்டு வருகின்றார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், 45 வயதான ஷூமேக்கருக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து பகிரங்கமாக அறிவிக்கப்படாது என்றும் மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள லூசியான் நகரிலுள்ள பல்கலைக் கழக மருத்துவமனையில் அவர் இன்று காலை அனுமதிக்கப்பட்டார் என அந்த மருத்துவமனையின் பேச்சாளர் பின்னர் அறிவித்தார். ஆனால் அவர் எந்த அறையில், எந்த பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறித்து அறிவிக்கப்படவில்லை.
குடும்பத்தினரின் வேண்டுகோளுக்கிணங்கவும், மருத்துவ காரணங்களுக்காகவும் அவருக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் இரகசியமாக வைக்கப்படுகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லூசியான் நகரின் அருகில்தான் ஷூமேக்கரின் குடும்ப இல்லம் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த மைக்கல் ஷூமேக்கர் கடந்த ஆண்டுகளில் பல கார் பந்தயங்களில் வெற்றியாளராக வாகை சூடியிருக்கின்றார்.
கடந்த டிசம்பர் 29ஆம் தேதி பிரான்ஸ் நாட்டின் ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த போது கீழே விழுந்து ஒரு பாறையில் மோதி, தலைக் காயங்களுடன் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.