Home வணிகம்/தொழில் நுட்பம் லுப்தான்சா விமான சேவையில் இனி கையடக்கக் கருவிகளில் திரைப்படங்கள் பார்க்கலாம்!

லுப்தான்சா விமான சேவையில் இனி கையடக்கக் கருவிகளில் திரைப்படங்கள் பார்க்கலாம்!

614
0
SHARE
Ad

Lufthansa 440 x 215பிப்ரவரி 19 – ஜெர்மனி நாட்டின் அதிகாரபூர்வ விமான நிறுவனமான லுப்தான்சா தனது சேவைகளில் பயணிகள் தங்களுக்குத் தேவையான திரைப்படங்களை தங்களின் கையடக்கக் கருவிகளில் பதிவிறக்கம் செய்து பார்த்துக் கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

#TamilSchoolmychoice

தற்போது அந்த நிறுவனம் தனது விமானங்களில் போர்ட் கொன்னெக்ட் (BoardConnect) என்னும் வசதியை நிர்மாணித்து வருகின்றது. இதன் மூலம் ஒரு பிரத்தியேக  செல்பேசி செயலியை (mobile app) தங்களின் திறன் பேசிகள் (smart phones), ஐ-பேட் போன்ற தட்டைக் கணினிகள் (tablets)   போன்ற கையடக்கக் கருவிகளில் பயணிகள் முதலில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

அதன்பிறகு விமானப் பயணத்தின்போது லுப்தான்சா விமான நிறுவனம் உட்புற சேவையாக வழங்கும் திரைப்படங்கள் மற்றும் மற்ற நிகழ்ச்சிகளை, தங்களின் கையடக்கக் கருவிகளில் ஏற்கனவே பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ள செயலியின் மூலமாகப் பார்த்து மகிழலாம்.

கம்பியில்லாச் சேவையின் (wireless) மூலம் இந்த வசதியை பயணிகள் பயன்படுத்திக் கொள்ளலாம். எதிர்வரும் மே மாதம் முதல் இந்த சேவை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதுமட்டுமல்லாமல், சைவ உணவு தேவைப்படுபவர்களும் மற்ற வகை உணவுகள்  தேவைப்படுபவர்களும் இந்த செயலியின் மூலமாக முன்கூட்டியே பதிவு செய்து கொள்ள முடியும்.

விமான சேவையின் போது பானங்கள் அருந்துபவர்கள் தங்களின் பானம் முடிந்து விட்டது என்றாலோ, மீண்டும் தேவை என்றாலோ இந்த செயலியின் மூலமாக விமான சேவை பணியாளர்களுக்கு தெரிவிக்க முடியும்.

இந்த செயலி சேவையின் மூலமாக, லுப்தான்சா விமான நிறுவனம் பயணம் மேற்கொள்ளும் நகர்கள் எவை என்பது போன்ற தகவல்களையும் பயணிகள் பெற முடியும் என்பதோடு, தீர்வையற்ற பொருட்களையும் அவர்கள் வாங்க முடியும்.

வெர்ஜின் ஆஸ்திரேலியா மற்றும் எல் ஆல் இஸ்ரேல் ஏர்லைன்ஸ் போன்ற விமான நிறுவனங்கள் ஏற்கனவே இந்த சேவையை அறிமுகப்படுத்திவிட்டன.

மற்ற விமான நிறுவனங்களும் இந்த தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்து ஆலோசித்து வருகின்றன.