ஈரோடு, பிப் 24 – ‘முஸ்லிம்கள் இடஒதுக்கீடு உயர்த்தி வழங்காவிட்டால் அதிமுகவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுப்போம்‘ என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் 15வது மாநில பொதுக்குழு கூட்டம் ஈரோடு பிளாட்டினம் மகாலில் நேற்று நடந்தது. இதில், கலந்து கொண்ட மாநில தலைவர் ஜெய்னுல்ஆபிதீன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு 3.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இதை உயர்த்தி வழங்க வேண்டும் என்று தொடர்ந்து கோரி வருகிறோம்.
கடந்த தேர்தலில் முதல்வர் ஜெயலலிதா இடஒதுக்கீட்டை அதிகப்படுத்தி தருவதாக வாக்குறுதி அளித்தார். அதனடிப்படையில் அதிமுகவிற்கு ஆதரவு அளித்தோம். ஆனால் கடந்த இரண்டரை ஆண்டுகளில் இதற்காக எந்த முயற்சியையும் அவர் எடுக்கவில்லை.
தற்போது, நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு இடஒதுக்கீட்டை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஆளும்கட்சிக்கு வைத்துள்ளோம்.
எங்களின் கோரிக்கையை நிறைவேற்றினால் அதிமுகவை ஆதரிப்போம். இல்லையென்றால் அதிமுகவிற்கு எதிரான நிலைப்பாட்டை நாங்கள் எடுப்போம். இவ்வாறு பேட்டியின்போது தெரிவித்தார்.