டெல்லி, பிப் 24 – ஜெனிவாவில் நடைபெற உள்ள மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிப்பது தொடர்பாக வெளியுறவு துறையமைச்சர் நல்ல முடிவு எடுப்பார் என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு எதிராக மனித உரிமை ஆணையத்தில் ஏற்கனவே அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா ஆதரித்துள்ளதை அவர் குறிப்பிட்டார். இந்த முறையும் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகள் கோரிக்கை எழுப்பி உள்ளதாக நாராயணசாமி கூறினார்.
இது குறித்து வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் நல்ல முடிவு எடுப்பார் என்று நாராயணசாமி நம்பிக்கை தெரிவித்தார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக தமிழக அரசின் அணுகுமுறைக்கு நாராயணசாமி அதிருப்தி தெரிவித்தார்.
விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனை கைது செய்து இந்தியா கொண்டு வர வேண்டும் என்று ஏற்கனவே கூறியுள்ள முதலமைச்சர் ஜெயலலிதா, ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களை விடுவிக்க முடிவு எடுத்தது ஏன்? என்று அவர் கேள்வி எழுப்பினார்.
காலதாமதத்தை காரணம் காட்டி ராஜீவ் கொலை வழக்கில் குற்றவாளிகளை விடுவிக்கலாம் என்பதை ஏற்க முடியாது என்று அவர் தெரிவித்தார். மேலும் ராஜீவ் கொலை வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு குறித்து ராகுல் வரம்பு மீறி விமர்சிக்கவில்லை என்று நாராயணசாமி திட்டவட்டமாக தெரிவித்தார்.