சென்னை, பிப் 25 – ராஜீவ் காந்தி கொலையாளிகளை தூக்கிலிட வேண்டும் என்றவர்கள் தற்போது மாற்றி பேசுவது ஏன்? என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 3 பேரின் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டது பற்றி ராகுல் காந்தி கருத்து தெரிவித்தது நீதிமன்ற அவமதிப்பு ஆகாது.
இது ஜனநாயக நாடு. நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வது போன்று ஒரு வரம்போடு நீதிமன்ற தீர்ப்பு குறித்தும் கருத்து தெரிவிக்கலாம். ஏற்கனவே நாம் பயங்கரவாதத்தால் இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தியை இழந்துவிட்டோம்.
மீண்டும் இது போன்று நடக்காமல் இருக்க உரிய நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டிருக்கிறோம். ராஜீவ் காந்தி கொலையாளிகளை தூக்கிலிட வேண்டும் என்றவர்கள் தற்போது மாற்றி பேசுவது ஏன்? ஜெனிவாவில் நடக்கவிருக்கும் ஐ.நா. சபை மனித உரிமை மாநாட்டில் இலங்கைக்கு எதிராக இந்தியா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று திமுக எம்.பி.க்கள் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் வலியுறுத்தியுள்ளனர்.
இதே போன்ற கோரிக்கையை தான் காங்கிரஸ் எம்.பி.க்களும் பிரதமரிடம் தெரிவித்துள்ளனர். இலங்கையில் இருக்கும் தமிழர்களுக்கு ஆதரவாகவே மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.
ஏற்கனவே ஐ.நா. சபையில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்துள்ளது. தற்போது இது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது என்றார் மத்திய அமைச்சர் நாராயணசாமி.