கோலாலம்பூர், பிப் 25 – சரவாக் முதலமைச்சர் டான்ஸ்ரீ அப்துல் தாயிப் மாஹ்முட்டை ஆளுநராக நியமித்தால், அவர் இன்னொரு மகாதீராக உருவாகிவிடுவார் என்று பிகேஆர் வியூக இயக்குநர் ரபிஸி ரம்லி கூறியுள்ளார்.
பிகேஆர் பத்து லிந்தாங் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சீ சீ ஹவ் உடன் இணைந்து இன்று பிரதமர் துறை அலுவலகத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்த ரபிஸி, மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையம் தாயிப் மற்றும் அவரது குடும்பத்தினரின் மீதுள்ள வழக்கை விசாரணை செய்து முடிக்கும் வரை, அவரை ஆளுநராக நியமிப்பதை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
ஏற்கனவே மகாதீரால் அவ்வப்போது விமர்சிக்கப்பட்டு வரும் நஜிப், தாயிப்பை ஆளுநராக நியமிப்பதன் மூலம் அரசாங்கத்தின் நிர்வாகத்தில் மூக்கை நுழைக்கும் இன்னொரு மகாதீரை உருவாக்கிக் கொள்ள வேண்டாம் என்றும் ரபிஸி கருத்துத் தெரிவித்துள்ளார்.
சரவாக் மாநில முதலமைச்சராக கடந்த 33 ஆண்டுகளாக பதிவி வகித்து வந்த தாயிப், அண்மையில் தனது பதவியில் இருந்து ஓய்வு பெற்று, அம்மாநில ஆளுநராக பதவி ஏற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.