
புத்ரா ஜெயா: பிகேஆர் கட்சித் தேர்தலில் துணைத் தலைவர் பதவிக்கானப் போட்டியில் நூருல் இசாவிடம் தோல்வி கண்ட பொருளாதாரத் துறை அமைச்சர் ரபிசி ரம்லி தன் அமைச்சுப் பொறுப்பிலிருந்து விலகினார்.
அவரின் பதவி விலகல் ஜூன் 17 முதல் அமுலுக்கு வருகிறது. அதற்கு முன்பாக எஞ்சிய தனது அதிகாரபூர்வ விடுமுறையை அவர் கழிப்பார்.
பிகேஆர் கட்சித் தேர்தலுக்கான பிரச்சாரங்களின்போது துணைத் தலைவருக்கான போட்டியில் தோல்வி கண்டால் பதவி விலகுவேன் என ரபிசி பல முறை அறிவித்திருந்தார்.
ரபிசியின் பதவி விலகலைத் தொடர்ந்து பிரதமர் அன்வாரின் அமைச்சரவை மாற்றியமைக்கப்படும் என உறுதியாகியுள்ளது. சபா தேர்தலுக்கு முன்பாக அமைச்சரவை மாற்றம் நிகழலாம்.
அல்லது, இடைக்காலத்திற்கு யாராவது ஓர் அமைச்சர் பொருளாதார அமைச்சராகக் கூடுதல் பணிகளைக் கவனிக்கலாம். அமைச்சரவை மாற்றத்தை அன்வார் பின்னர் தனக்குரிய கால அவகாசத்திற்கேற்பவோ, அல்லது சபா சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னரோ அமைச்சரவை மாற்றத்தை மேற்கொள்ளலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.