புதுடில்லி, பிப் 25 – “நாடாளுமன்றத் தேர்தலில், அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று, பீகாரில், இழந்த செல்வாக்கை மீட்க வேண்டும்’ என, தீவிரமாக முயற்சித்து வந்த லாலு பிரசாத் யாதவுக்கு, பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
அந்த கட்சியின், ஏழு எம்.எல்.ஏ.,க்கள், ஆளும், ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு சென்றுள்ளனர். இதனால், லாலு கட்சி, இரண்டாக உடைந்துள்ளது. இழந்த செல்வாக்கை பீகாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம் ஆட்சி நடக்கிறது.
இங்கு, முன்னாள் முதல்வர், லாலு பிரசாத் யாதவின், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிக்கு, 22 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். வரும் நாடாளுமன்றத் தேர்தலில், காங்கிரசுடன் கூட்டணி அமைத்து, அதிக தொகுதிகளில் வெற்றி பெறுவதன் மூலம், இழந்த செல்வாக்கை, மீட்பதற்கு, பெரும் முயற்சி செய்து வந்தார் லாலு.
இந்நிலையில், அவரின் சொந்த கட்சியிலேயே, அவருக்கு எதிராக, எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அவரின் கட்சியைச் சேர்ந்த, 13 எம்.எல்.ஏ.,க்கள், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியுடனான தொடர்புகளை முறித்துக் கொள்வதாகவும், ஆளும், ஐக்கிய ஜனதா தளம்
கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும், பீகார் சட்டசபை சபாநாயகருக்கு, நேற்று கடிதம் எழுதி, பரபரப்பை ஏற்படுத்தினர்.
அந்த கட்சியின் எம்.எல்.ஏ.,வான, ஜாவேத் இக்பால், சாம்ராட் சவுத்ரி ஆகியோர், இந்த தகவலை உறுதி செய்தனர். சவுத்ரி கூறுகையில், “காங்கிரஸ் கட்சி தான், கால்நடை தீவன ஊழல் வழக்கில், லாலுவை சிறைக்கு அனுப்பி, அழகு பார்த்தது.
இப்போது, அதே கட்சியுடன் கூட்டணி அமைக்கிறார்; இதை, எங்களால் ஏற்க முடியாது,” என்றார். நேற்று மாலை, இந்த விவகாரத்தில், திடீர் திருப்பம் ஏற்பட்டது. லாலு கட்சியிலிருந்து சென்ற 13 எம்.எல்.ஏ.,க்களில், ஆறு பேர், “ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியிலேயே, தொடர்ந்து செயல்படுவோம்; கட்சியை விட்டு விலகும் எண்ணம் இல்லை’ என, அறிவித்துள்ளனர்.
ஆனாலும், ஏழு, எம்.எல்.ஏ.,க்கள், ஆளும் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி, இரண்டாக உடைந்து, லாலுவுக்கு, பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.