Home வாழ் நலம் ஆரோக்கியப் பெட்டகம்-தேங்காய்!

ஆரோக்கியப் பெட்டகம்-தேங்காய்!

838
0
SHARE
Ad

coconutபிப் 25 – தேங்காய் நல்லதா, கெட்டதா என்பதில் பலருக்கும் பலவிதக் கருத்துகளும் கேள்விகளும் உண்டு. கேரளா மற்றும் இலங்கையைச் சேர்ந்தவர்களுக்கும்  இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் தேங்காய் இல்லாமல் சமையல் ருசிப்பதே இல்லை.

சாம்பாரோ, ரசமோ, கூட்டோ, பொரியலோ, வேறு  எந்த உணவோ,அதில் பிரதானமாக இடம் பெறுவது தேங்காய். அவர்களுடன் ஒப்பிடும் போது, நம்மூரில் தேங்காயின் உபயோகம் சற்று  குறைவுதான். அதிக தேங்காய் ஆபத்தானது என்று அதைத் தவிர்ப்பவர்கள் ஒரு பக்கம்.

‘கேரளாலயும் இலங்கைலயும் தேங்காய் சாப்பிடறவங்க எல்லாம் வியாதிக்காரங்களாகவா இருக்காங்க? அதெல்லாம் ஒண்ணும் செய்யாது’ என்று  அதைச் சேர்த்துக் கொள்கிறவர்கள் இன்னொரு பக்கம்… உண்மையில் தேங்காய் நல்லதா? கெட்டதா?

#TamilSchoolmychoice

தேங்காயை சமையலில் உபயோகிப்பதில் தவறே இல்லை. அதை எப்படி உபயோகிக்கிறோம் என்பதில்தான் விஷயமே இருக்கிறது. தினசரி 30 முதல்  40 கிராம் தேங்காயை உபயோகிக்கலாம். அதை அப்படியே பச்சையாக சேர்த்துக் கொள்கிற வரை பிரச்னையில்லை. துருவி, பால் எடுத்துக் கொதிக்க  வைக்கிற போதுதான் அதில் கொழுப்பு அதிகரிக்கிறது. அதே மாதிரிதான் கொப்பரையும். சில வகை உணவுகள் கொப்பரை சேர்ப்பதால் கூடுதலாக  ருசிப்பதுண்டு.

அந்தக் கொப்பரைதான் கெடுதலே. தேங்காய் முற்றி கொப்பரையாகும் போது, அதிலுள்ள நல்ல தன்மைகள் மாறி, கொழுப்பு கூடுகிறது. கூடிய வரை  கொப்பரையை சமையலில் சேர்க்காமலிருப்பதே நலம். மற்றபடி சமைக்காத தேங்காயானது எல்லோருக்குமே நல்லதுதான். கொலஸ்ட்ரால்  அதிகமுள்ளவர்கள் மட்டும் தேங்காயைத் தவிர்ப்பது பாதுகாப்பானது. தேங்காயை பால் எடுத்து உபயோகிக்கிற போது, அதிலுள்ள நார்ச்சத்தை எடுத்து  விடுகிறோம்.

வெறும் கொழுப்பு மட்டுமே மிஞ்சியிருக்கும். தேங்காய்க்கு வயிற்றுப்புண்களை ஆற்றும் சக்தி உண்டு. அதனால்தான் வாயில் புண் வந்தால்கூட,  தேங்காயை பச்சையாக மென்று சாப்பிடச் சொல்வார்கள். அதன் பால் புண்ணில் பட்டால், சீக்கிரமே ஆறும். அல்சர் நோயாளிகளுக்கும் தேங்காய் பால்  சேர்த்த உணவுகளை அதிகம் பரிந்துரைப்பதன் பின்னணியும் இதுதான்.

தேங்காய் ஏன் கூடாது?

சாச்சுரேட்டட் ஃபேட்டி ஆசிட் எனப்படுகிற கெட்ட கொழுப்பு அதில் அதிகம் என்பதே காரணம். கொப்பரை மற்றும் சமைத்த தேங்காயில் இது அதிகம்.  மற்றபடி குழந்தைகளுக்கு புரதம் மற்றும் கொழுப்பின் அளவை அதிகரிக்க வேண்டும் என்கிற நிலையில், தேங்காய் சேர்த்த பர்பி, தேங்காயும்  வெல்லமும் சேர்த்த இனிப்புகளும் அதிகம் தரலாம். 09-coconutmilkhaircare

எடை குறைவான குழந்தைகளுக்கு கொப்பரையில் உள்ள புரதம், கொழுப்பு மற்றும் கலோரி உதவும். அவர்களுக்கு கொப்பரையில் செய்த பொடி,  கொப்பரை மிக்சர் போன்றவற்றை அடிக்கடி கொடுக்கலாம். கொப்பரைத் துருவல், காய்ந்த மிளகாய், உளுந்து, கறிவேப்பிலை, பெருங்காயம்  எல்லாவற்றையும் வெறும் கடாயில் வறுத்து, உப்பு சேர்த்துப் பொடிக்கவும். எடை குறைவான குழந்தைகளுக்கு சூடான சாதத்தில் இந்தப் பொடி  சேர்த்துப் பிசைந்து கொடுத்தால், உடல் பூசின வாகு பெறும்.

தேங்காயே சேர்க்கக் கூடாது என்பவர்களுக்குக்கூட மருத்துவர்களும் உணவு ஆலோசகர்களும் இளநீர் எடுத்துக் கொள்ளச் சொல்வதுண்டு. இளநீர் அத்தனை இதமான ஒரு உணவு. வயிற்றுப்போக்கு ஏற்பட்டு, உடலிலுள்ள நீர் சத்தெல்லாம் வறண்டு, மருத்துவமனையில் சேர்கிற அளவுக்கு  மோசமான உடல்நிலையில் உள்ள ஒருவருக்கு ஒரு இளநீர் கொடுத்தால் போதும்… இன்ஸ்டன்ட் எனர்ஜி வந்து ஒட்டிக் கொள்ளும்.

இளநீரில் உள்ள சோடியம் மற்றும் பொட்டாசியம் அளவு வேறெந்த உணவிலும் இல்லாத அளவுக்கு அபரிமிதமானது. இதய நோயாளிகளுக்கு இளநீர்  பரிந்துரைக்கப்படும். அவர்களுக்குத் தேவையான சுத்தமான பொட்டாசியம் இளநீரில் மட்டும்தான் கிடைக்கும். அதுவே அவர்களுக்கு சிறுநீரகக்  கோளாறு இருந்தால், இளநீர் கொடுக்கக் கூடாது. அப்படி மீறிக் கொடுத்தால், அவர்களது உயிருக்கே ஆபத்தாக முடியலாம்.

காலையில் இளநீர்?

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் இளநீர் குடித்தால் நல்லது என்கிற தவறான அபிப்ராயம் நிறைய பேருக்கு உண்டு. அதைத் தவிர்த்து,  காலை உணவுக்கும், மதிய உணவுக்குமான இடைவெளியில் இளநீர் குடிப்பதே சிறந்தது. வெறும் வயிற்றில் குடிப்பதால், அதில் உள்ள சிறிதளவு  கார்போஹைட்ரேட்கூட, நமது உடலில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகப்படுத்தலாம். இளநீர் குடிப்பதால் உடல் சூடு தணியும். அதிலுள்ள  கனிமங்கள் உடலுக்கு நல்லது.

விளையாட்டு வீரர்கள், தீவிர உடற்பயிற்சியாளர்கள் போன்றோர், விளையாடி முடித்ததும், பயிற்சி முடித்ததும் உடனே இளநீர் குடித்தால்,  இன்ஸ்டன்ட்டாக சக்தியைப் பெறுவார்கள். டயட் செய்கிறவர்கள், எப்போதும் களைப்பாகவே உணர்கிறவர்களுக்கும் இளநீர் அருமையான உணவு. தினம்  ஒரு இளநீர் குடிக்கிறவர்கள் என்றும் இளமையாகவே காட்சியளிப்பார்கள். வெளியில் செல்கிற போது, தாகத்துக்கு ஏரியேட்டட் குளிர்பானங்களைக்  குடிப்பதைத் தவிர்த்து, இளநீர் குடிக்கிற பழக்கத்துக்கு மாறலாம்.

தேங்காய் ஸ்பெஷல் ரெசிபி

உருளைக்கிழங்கு ரெய்தா

என்னென்ன தேவை?

வேகவைத்து தோலுரித்த உருளைக்கிழங்கு – 100 கிராம், பச்சை மிளகாய் -2, வெங்காயம் -1, தேங்காய்த் துருவல் – 50 கிராம், தயிர் – 100 மி.லி.,  கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, பெருங்காயம் – தாளிப்பதற்கு, எண்ணெய் – 1 டீஸ்பூன், கொழுப்பு நீக்கிய தயிர் – 100 மி.லி., உப்பு – தேவைக்கேற்ப,
கொத்தமல்லி – அலங்கரிக்க.

எப்படிச் செய்வது?

உருளைக்கிழங்கை மசித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளிக்கவும். பொடியாக நறுக்கிய  வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, அதை மசித்து  வைத்துள்ள உருளைக்கிழங்கில் சேர்த்து, தயிரும் உப்பும் சேர்த்துக் கலந்து,  கொத்தமல்லி தூவிப் பரிமாறவும்.

5727_341129236007544_642196948_nஇளநீர் காக்டெயில்

என்னென்ன தேவை?
வழுக்கை இல்லாத இளநீர் – 1, எலுமிச்சை – அரை மூடி, புதினா – 10 கிராம், இஞ்சி – 5 கிராம், உப்பு – 1 சிட்டிகை, சோடா – 100 மி.லி.

எப்படிச் செய்வது?

புதினா, இஞ்சி, இளநீர், உப்பு எல்லாவற்றையும் மிக்சியில் சேர்த்து ஒன்றாக அடித்து, வடிகட்டவும். அத்துடன் எலுமிச்சைச் சாறும், குளிர்ந்த சோடாவும்  சேர்த்துப் பரிமாறவும்.

நியூட்ரி பால்ஸ்

என்னென்ன தேவை?

உடைத்த முந்திரி, உடைத்த பாதாம், பொடியாக நறுக்கிய பேரீச்சம் பழம், அத்திப்பழம், ஆப்ரிகாட் (உலர்ந்த, பதப்படுத்தப்பட்ட பேரிக்காய். பெரிய  கடைகளில் கிடைக்கும்)  கலவை – 1 கப், தேன் – 1 டேபிள்ஸ்பூன், பதப்படுத்தப்பட்ட உலர்ந்த தேங்காய் – 2 டேபிள்ஸ்பூன்.

எப்படிச் செய்வது?

முந்திரி முதல் ஆப்ரிகாட் வரை எல்லாவற்றையும் ஒன்றாகக் கலக்கவும். தேன் சேர்த்து சின்னச் சின்ன உருண்டைகளாகப் பிடிக்கவும். தேங்காய்த்  துருவலில் புரட்டி, ஃப்ரிட்ஜில் குளிர வைத்துப் பரிமாறவும்