புத்ரா ஜெயா, பிப் 25 – நாடு முழுவதும் உள்ள அரசாங்க மருந்தகம் மற்றும் மருத்துவமனைகளில் வெளிநாட்டினர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 30 முதல் 40 விழுக்காடு கட்டணக் கழிவு இனி நிறுத்தப்பட்டு முழுமையான கட்டணம் வசூலிக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் கூறினார்.
முழுமையான கட்டணம் வசூலிப்பதன் மூலம் அரசாங்கத்திற்கு 100 மில்லியன் ரிங்கிட் வரை நிதி கிடைப்பதாகவும், அப்பணத்தின் மூலம் நாட்டிலுள்ள மருத்துவமனைகளின் தரத்தை உயர்த்த முடியும் என்றும் சுப்ரா குறிப்பிட்டார்.
மேலும், பிரிட்டன் போன்ற நாடுகளில் வெளிநாட்டவர்கள் சொந்தமாக மருத்துவக் காப்புறுதி எடுத்துக் கொள்வது அவசியம் என்றும், இல்லையென்றால் மருத்துவ சேவைக்கான முழு செலவையும் அவர்கள் தான் ஏற்றுக் கொள்ளும் நிலை உள்ளது என்றும் சுப்ரா தெரிவித்தார்.
மலேசியாவில் 98 சதவிகிதம் மருத்துவ செலவுகளை அரசாங்கமே ஏற்றுக் கொள்கிறது. அதற்கு மக்கள் நன்றி சொல்ல வேண்டும் என்றும் சுப்ரா கூறினார்.
அதுமட்டுமல்லாமல், தற்போது நாட்டிலுள்ள மருந்தகங்கள் மற்றும் மருத்துவமனைகளின் தரத்தை உயர்த்த தேவையான திட்டங்களுக்கு அரசாங்கம் 1.9 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கியுள்ளதாகவும் சுப்ரா அறிவித்தார்.