Home நாடு செடிக்: “உதவி என்று கேட்டு வந்தவர்களுக்கு என்னால் இயன்றதை செய்துள்ளேன்!”- டாக்டர் சுப்ரமணியம்

செடிக்: “உதவி என்று கேட்டு வந்தவர்களுக்கு என்னால் இயன்றதை செய்துள்ளேன்!”- டாக்டர் சுப்ரமணியம்

1075
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அண்மையில் தேசிய கணக்கு தணிக்காய்வாளர் வெளியிட்ட அறிக்கையில் செடிக் இலாகாவின் நிதி விநியோகம் குறித்து சர்ச்சைகள் எழுந்துள்ளதைத் தொடர்ந்து சுகாதார அமைச்சின் முன்னாள் அமைச்சரும், மஇகாவின் முன்னாள் தலைவருமான டத்தோஶ்ரீ டாக்டர் எஸ். சுப்ரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:

தனது தலைமையின் கீழ் பல்வேறு அரசு சார்பற்ற இயக்கங்கள் மற்றும் வழிபாட்டு இல்லங்களுக்கு நிதி உதவி வழங்க மானியங்களை தாம் கோரியிருந்ததாகக் கூறப்பட்ட விவகாரத்திற்கு டாக்டர் சுப்ரமணியம் இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.

#TamilSchoolmychoice

அமைச்சரவையில் உள்ள ஒரே இந்தியத் தலைவர் என்ற முறையில் தமக்கு ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான நிதி விண்ணப்பங்கள் ஏழை இந்திய குடும்பங்கள், ஏழை மாணவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், கைவிடப்பட்ட தாய்மார்கள், தீயில் பாதிக்கப்பட்டவர்கள், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து வந்ததாக டாக்டர் சுப்ரமணியம் கூறினார். வேறு எந்த வழியும் இல்லாததால்தான் அவர்கள் தம்மிடம் நிதி உதவி கோரி வந்தனர் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

அவர்களை விடுத்து, இந்து மற்றும் பிற இந்திய வழிபாட்டுத் தலங்கள், விளையாட்டு, மொழி மற்றும் கலாச்சார சங்கங்கள் அவற்றின் திட்டங்களை மேற்கொள்வதற்கும் அவற்றின் வசதிகளை மேம்படுத்துவதற்கும் ஆதரவு தேடி தம்மிடம் வந்தவர்கள் ஏராளம் என்று அவர் குறிப்பிட்டார்.

“இந்த விண்ணப்பங்களுக்கு தீர்வு வழங்குவதற்காக நான் பிரதமரின் உதவியைக் கோரியிருந்தேன். பிரதமர் துறையின் கீழ் அமலாக்க ஒருங்கிணைப்பு பிரிவு மூலம் சிறப்பு நிதி வழங்கவும் உதவவும் பிரதமர் ஒப்புக் கொண்டார். அனைத்து விண்ணப்பங்களும் ஐசியுவிற்கு அனுப்பப்பட்டன. பின்னர் அவ்விண்ணப்பங்களை ஒரே ஒரு முறை வழங்கப்படும் மானியத் திட்டத்தின் கீழ் அமலாக்க ஒப்புதல்கள் அளிக்கப்பட்டன. எனவே எந்தவொரு நலன் முரண்பாடும் இந்த விவகாரத்தில் எழுவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

ஒரு சமூகத் தலைவராக, மக்களின் விண்ணப்பங்களை ஐசியுவின் பார்வைக்கு கொண்டு செல்ல தாம் கடமைப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டார். சமூகத்தின் பல நிலைகளில் ஆதரவு தேவைப்படும் இந்திய சமூகத்திற்கு உதவுவதே இதன் உன்னத நோக்கமாக இருந்ததாக அவர் கூறினார்.

உதாரணத்திற்கு கீழ்காணும் நிதி உதவிகள் பெருமளவில் வழங்கப்பட்டுள்ளன:

1. கட்டுமானத்தில் உள்ள நூற்றுக்கணக்கான கோயில்களுக்கு மானியங்கள் வழங்கப்பட்டன.

2. அமைப்புகள் கட்டும் அரங்குகள் மற்றும் சமூக மையங்கள் ஆதரிக்கப்பட்டு உதவிகள் வழங்கப்பட்டன.

3. ஏழைகள் மற்றும் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு உதவும் வகையில் நடவடிக்கைகளை நடத்துவதற்கு அரசு சார்பற்ற அமைப்புகளுக்கு உதவிகள் வழங்கப்பட்டன.

4. மொழியை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள மொழி அடிப்படையிலான அமைப்புகளுக்கும் உதவிகள் வழங்கப்பட்டன.

5. விளையாட்டு மற்றும் கலாச்சார அடிப்படையிலான அரசு சார்பற்ற அமைப்புகள் தங்கள் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளைச் செய்ய ஆதரவு வழங்கப்பட்டது.

6. கல்வி தொடர்பான செயல்பாடுகளை நடத்துவதற்கு கல்வி தொடர்பான அரசு சார்பற்ற அமைப்புகளுக்கும் நிதி உதவிகள் வழங்கப்பட்டன.

7. பல கைவிடப்பட்ட தாய்மார்கள், வெள்ளம் மற்றும் தீயில் பாதிக்கப்பட்டவர்கள், மருத்துவச் செலவுகள், உதவி தேவைப்படும் மாணவர்கள் மற்றும் பொது நலத் தேவைகளுக்கும் உதவிகள் வழங்கப்பட்டன.

“நான் ஆயிரக்கணக்கான விண்ணப்பங்களைப் பெற்றதால், நிதி குறைவாக இருந்தபடியாலும் அனைவருக்கும் உதவ முடியாத சூழல் ஏற்பட்டது. ஆனால், ஒதுக்கப்பட்ட நிதிகளுக்குள் எங்களால் முடிந்த உதவிகளைச் செய்ய முயற்சி செய்தேன்.” என்று டாக்டர் சுப்ரமணியம் தெளிவுப்படுத்தினார்.

இந்திய சமூகத்திற்கு இதுபோன்ற ஆதரவு தொடர்ந்து தேவைப்படுவதாகவும், அதனை தற்போது மித்ரா (செடிக் என்று முன்பு அழைக்கப்பட்டது) ஏற்று செயல்படுத்துவதை தாம் ஆதரிப்பதாகவும் அவர் கூறினார்.

“ஒரு தலைவராக, சமூகத்தின் கோரிக்கைகளுக்கும் தேவைகளுக்கும் பதிலளிப்பது எனது கடமையாக இருந்தது. பொறுப்பான மற்றும் நேர்மையான முறையில் எனது திறனுக்கு ஏற்றவாறு அதனை செய்து முடித்துள்ளேன்.” என்று டாக்டர் சுப்ரமணியம் தமது அறிக்கையில் தெரிவித்தார்.