Home நாடு செடிக் நிதி ஒதுக்கீடு சர்ச்சை: தேவமணி விளக்கம்

செடிக் நிதி ஒதுக்கீடு சர்ச்சை: தேவமணி விளக்கம்

2377
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தேசிய கணக்கு தணிக்காய்வாளர் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் செடிக் இலாகாவின் நிதி விநியோகம் குறித்து சர்ச்சைகள் எழுந்துள்ளதைத் தொடர்ந்து பிரதமர் துறையின் முன்னாள் துணை அமைச்சரும், மஇகாவின் முன்னாள் துணைத் தலைவருமான டத்தோஶ்ரீ எஸ்.கே. தேவமணியின் பத்திரிக்கை அறிக்கை விளக்கம் பின்வருமாறு:

“பிரதமர் துறை இலாகாவின் துணையமைச்சர் என்ற முறையில் எனது பெயரும் கணக்காய்வாளரின் அறிக்கையிலும், பத்திரிக்கைச் செய்திகளிலும் குறிப்பிடப்பட்டிருப்பதால் இந்த விவகாரங்கள் குறித்து சில அம்சங்களைத் தெளிவுபடுத்தவும் விரும்புகிறேன்.

கடந்த 27 ஜூன் 2016-ஆம் நாள் நான் பிரதமர் துறையின் துணையமைச்சராக நியமிக்கப்பட்டேன். அதற்கு முன்பாகவே 2014-ஆம் ஆண்டிலேயே செடிக் உருவாக்கப்பட்டு, இந்தியர் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவின் கீழ் இயங்கி வந்தது. அப்போதைய பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்தான் இந்த அமைச்சரவைக் குழுவின் தலைவராகச் செயல்பட்டார்.

#TamilSchoolmychoice

துணையமைச்சராக நான் பொருளாதாரத் திட்டமிடல் பிரிவின் கீழ் பதவி வகித்த காலகட்டத்தில் இந்திய சமூகத்தினரை சமூகபொருளாதார ரீதியாக மேம்படுத்துவதற்கான பல்வேறு திட்டங்கள் குறித்து எனக்கு நிறைய விண்ணப்பங்கள் வந்தன. அந்த விண்ணப்பங்களின் கோரிக்கைகள் அடிப்படையில் சிறப்பு நிதி ஒதுக்கீட்டைச் செய்யுமாறு நான் பொருளாதாரத் திட்டமிடல் பிரிவுக்கு பரிந்துரைகளைச் சமர்ப்பித்தேன்.

அப்போதைய பொருளாதாரத் திட்டமிடல் பிரிவுக்கான அமைச்சரின் மூலமாக நிதி ஒதுக்கீட்டைச் செய்த பொருளாதாரத் திட்டமிடல் பிரிவு அந்த நிதியை நிர்வகிக்கவும், திட்டங்களை அமுல்படுத்தவும் செடிக் வசம் ஒப்படைத்தது.

ஒதுக்கப்பட்ட நிதியை இந்திய சமூகத்தினருக்காக, பல்வேறு அரசு சாரா இயக்கங்களின் மூலமாக செடிக் பகிர்ந்தளித்தது. செடிக் நிர்ணயித்த விதிமுறைகள், நடைமுறைகளுக்கேற்ப இந்த அரசு சாரா இயக்கங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்து தங்களுக்குரிய நிதி ஒதுக்கீடுகளைப் பெற்றன.

தேசிய கணக்குத் தணிக்காய்வாளரின் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தபடி, பொருளாதாரத் திட்டமிடல் பிரிவு ஒதுக்கிய இந்நிதியில் எஞ்சியிருந்த 5,596,210 ரிங்கிட் நிதி, பி-40 எனப்படும் அடித்தட்டு 40 விழுக்காடு அனைத்து இன மக்களுக்கான நிதியாகும். இந்திய சமூகத்திற்கான மேம்பாட்டுத் திட்டங்களுக்கு மட்டுமே செடிக் செயல்பட முடியும் என்பதால் எஞ்சியிருந்த இந்த 5,596,210 ரிங்கிட் தொகை ஐசியு (ICU – Implementation and Coordination Unit) எனப்படும் பிரதமர் துறையின் பிரிவுக்கு அனுப்பப்பட்டது.

3 ஏப்ரல் 2018 தேதியிட்ட கடிதத்தின் வழி இந்த நிதி ஐசியு பிரிவுக்கு அனுப்பப்பட்டதுஓர் அரசு சாரா இயக்கத்திற்கான நிதி ஒதுக்கீட்டு விண்ணப்பம் என்று வரும்போது, செடிக் அமைப்புக்கென சொந்த விதிமுறைகளும், நடைமுறைகளும் அமுலில் இருந்தன. ஒரு விண்ணப்பத்தை எவ்வாறு பரிசீலிப்பது, அதன் உண்மைத் தன்மைகளை எப்படி ஆராய்வது, அங்கீகரிப்பது, அதனை அமுலாக்குவது போன்ற முடிவுகளில் செடிக் தனக்கென தனி நடைமுறைகளைக் கடைப்பிடித்தது.

இந்த நடைமுறைகளில் நான் தலையிட்டதோ, பங்கெடுத்துக் கொண்டதோ இல்லை என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். செடிக் அமைப்பின் எல்லா முடிவுகளும், நிதி பகிர்வுகளும், அதன் நிர்வாகக் குழுவின் முடிவுகளும் பின்னர் அப்போதைய பிரதமரே தலைமையேற்றிருந்த இந்திய விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவால் இறுதியில் அங்கீகரிக்கப்பட்டன.

இந்த விளக்கங்கள் மூலம் செடிக்கின் நிதி பங்கீடுகள் தொடர்பான பரிசீலனைகள், அங்கீகாரங்கள் ஆகியவற்றுக்கான நடைமுறைகள், விவகாரங்களில் நான் எந்த வகையிலும் பங்கெடுக்கவும் தலையிடவும் இல்லை என்பது தெளிவாகத் தெரியவரும். எனவே, எனது சொந்த நலன்கள், நான் வகித்த துணையமைச்சர் பதவிக்கான நலன்களுக்கு முரணான வகையில் நான் செயல்பட்டேன் என்ற கூற்றுக்கே இடமில்லை என்பதையும் வலியுறுத்த விரும்புகிறேன்.

இந்த விவகாரம் தொடர்பில் நான் சம்பந்தப்பட்ட அரசாங்க அமைப்புகள் எதுவாக இருந்தாலும் அதனுடன் ஒத்துழைத்து, இந்த விவகாரங்கள் குறித்த எனது விளக்கங்களைத் தரத் தயாராக இருக்கின்றேன்.”