Home நாடு “செடிக் நிதி அங்கீகரிக்கப்பட்ட விதிமுறைகளுக்கு ஏற்பவே நிர்வகிக்கப்பட்டது” – என்.எஸ்.இராஜேந்திரன்

“செடிக் நிதி அங்கீகரிக்கப்பட்ட விதிமுறைகளுக்கு ஏற்பவே நிர்வகிக்கப்பட்டது” – என்.எஸ்.இராஜேந்திரன்

899
0
SHARE
Ad

கோலாலம்பூர் – தற்போது மித்ரா எனப் பெயர் மாற்றம் கண்டிருக்கும் ‘செடிக்’ அமைப்பின் நிதி விநியோகம் முறையாகவே, அங்கீகரிக்கப்பட்ட விதிமுறைகளுக்கு ஏற்பவே நிர்வகிக்கப்பட்டது என செடிக்கின் முன்னாள் தலைமை இயக்குநர் டத்தோ என்.எஸ்.இராஜேந்திரன் தற்காத்து விளக்கியுள்ளார்.

இதன் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம் பின்வருமாறு:

“பின் தங்கிய B40 பிரிவைச் சேர்ந்த இந்திய சமூகத்தினரின் மேம்பாட்டிற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டங்களுக்கு நிதியை வழங்கி அத்திட்டங்களுக்கு உறுதுணையாக விளங்குவதற்கென 2014 ஆம் ஆண்டில் இந்திய சமூகப் பொருளாதார மேம்பாட்டுப் பிரிவு (SEDIC) நிறுவப்பட்டு அதன் பணியை மேற்கொண்டது.

#TamilSchoolmychoice

அங்கீகரிக்கப்பட்டு நடைமுறையில் இருந்த விதிமுறைகளின் அடிப்படையிலேயே 2014ஆம் ஆண்டு முதல் அரசு சார இயக்கங்களின் (NGO) விண்ணப்பங்கள் மதிப்பீடு செய்யப்பட்டு அவற்றிற்கு மானியங்கள் வழங்கப்பட்டு வந்தன.
அவ்வேளையில், முன்னாள் பிரதமரின் வேண்டுகோளுக்கு ஏற்ப, அனைத்துக் கூறுகளையும் கவனத்தில் கொண்ட விரிவான நிதி நிருவாக முறைமை ஒன்று செடிக்கால் தயாரிக்கப்பட்டு அவரின் அங்கீகாரத்தைப் பெற்று 2015ஆம் ஆண்டு ஜூன் 6-இல் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டது.

அந்நாள் முதல் அவ்விரிவான நிதி நிருவாக விதிமுறைகளின் அடிப்படையிலேயே அரசு சாரா அமைப்புகளாலும் (NGO) தனியார் திறன் பயிற்சிக் கழகங்களாலும் (ILKS) செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மதிப்பீடு செய்யப்பட்டு மானியங்கள் வழங்கப்பட்டன. இங்குக் குறிப்பிடத்தக்க முக்கிய அம்சம் என்னவெனில், செடிக்கால் நிர்வகிப்பதற்காக வழங்கப்பட்ட எல்லா நிதியும் விண்ணப்பிப்போருக்கு மானியமாக வழங்கப்படுவதற்கு முன்னர் அவ்விண்ணப்பங்களின் தகுதி நிலை ஆராயப்பட்டு 5 கட்ட மதிப்பீட்டிற்கு உட்படுத்தப்படும்.

அதன் பின்னர் பிரதமரின் இறுதி நிலை ஒப்புதல் பெறப் பெற்றப் பிறகே விண்ணப்பத்தாரர்களுக்கு மானியங்கள் வழங்கப்பட்டன. இங்கு நாம் தெளிவுபெற வேண்டிய மற்றுமொரு உண்மை யாதெனில் இந்திய சமூகத்தின் நன்மை கருதி அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டு மற்ற அரசு துறைகளின் மூலம் தனிப்பட்ட முறையில் பிற அமைப்புகளுக்கும் நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்ட மானியங்களுக்குச் செடிக்கைக் குறைசொல்லி பொறுப்பேற்கச் செய்வது முறையாகாது.

செடிக் என்பது பிரதமர் துறையின் கீழ் இயங்கிய ஓர் அரசு பிரிவாகும். அது அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டு நடைமுறையில் இருந்த பொது நிருவாக நெறி முறைகளையும் நிதி நிருவாக விதிமுறைகளையும் பின்பற்றியே தனது பணியை மேற்கொண்டது. பிரதமர் துறையின் கீழ் இயங்கும் தணிக்கையாய்வுப் பிரிவும் (Unit Audit) 2017ஆம் ஆண்டில் செடிக்கின் நிருவாக முறைகளைத் தணிக்கை செய்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். அத்தணிக்கையில் ஆவணப் பதிவுகள் வைப்பும் செயல்திட்ட அமலாக்கக் கண்காணிப்புகளும் மேம்படுத்தப்படவேண்டும் எனத் தணிக்கைக் குழுவினரால் பரிந்துரை செய்யப்பட்டதை மறுக்க இயலாது.

இவ்வாண்டு ஜூலை 15ஆம் திகதி நாடாளுமன்றத்தில் தேசிய தலைமை தணிக்கையாளரால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையிலும் அதே கருத்து வலியுறுத்தப்பட்டுள்ளதைக் காணலாம். கடந்த காலங்களில் இக்குறைகளைக் களைவதற்குச் செடிக்கால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. கண்காணிப்பு முறைமை மேம்படுத்தப்பட்டதோடு கருத்திணக்க ஒப்பந்தத்தில் (MoU) குறிப்பிட்டிருந்தவாறு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் விதி முறைகளை மீறிய அரசு சார இயக்கங்கள் மீதும் தனியார் திறன் பயிற்சி மையங்கள் மீதும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அவற்றுள் சில கறுப்புப் பட்டியலிடப்பட்டன.

கடந்த காலங்களில் B40 பிரிவைச்சேர்ந்த இந்திய சமூகத்தின் மேம்பாட்டிற்காக செடிக்கின் வழி நாடு தழுவிய நிலையில் பல்வேறு செயல்திட்ட்டங்களை மேற்கொள்ள 800க்கும் மேற்பட்ட அரசு சார இயக்கங்களுக்கும் தனியார் திறன் பயிற்சி மையங்களுக்கும் மானியங்கள் வழங்கப்பட்டன. அத்திட்டங்களுள் பாலர் பள்ளி மாணவர்கள், தொடக்க நிலை மற்றும் இடைநிலைப் பள்ளி மாணவர்கள், தனித்து வாழும் தாய்மார்கள், சமூகச்சீர்க்கேட்டுப் பாதிப்பிற்குள்ளான மாணவர்கள், பள்ளிப்படிப்பை தொடராத மாணவர்கள் முதலியோருக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. இந்திய சமூகத்தைச் சேர்ந்த 500,000ற்கும் மேற்பட்ட, குறிப்பாக B40 பிரிவைச் சேர்ந்தவர்கள் இத்திட்டங்களில் பங்குகொண்டு பயனடைந்துள்ளனர் என்பதை மறுக்க இயலாது.

திட்டங்களின் அமுலாக்கம் அவற்றின் கண்காணிப்பு ஆகியவற்றைக் குறிப்பிடவேண்டுமாயின், பெரும்பாலான அரசு சாரா இயக்கங்களும் தனியார் திறன் பயிற்சி மையங்களும் செடிக்கால் நிர்ணயிக்கப்பட்ட வழி முறைகளையும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்த விதிமுறைகளையும் பின்பற்றியே தங்கள் திட்டங்களை மேற்கொண்டன எனலாம்.

செடிக்கிற்கு ஒதுக்கப்பட்ட அனைத்து நிதியும் முறைக்கேடான வழியில் பயன்படுத்தப்பட்டுள்ளது எனவும் அதனால் இலக்காகக் கொள்ளப்பட்ட மக்கள் பயனடையவில்லை என்று கூறுவதும் பெரும் அபத்தமாகும். செடிக்கின் கண்காணிப்பின் வழியும் தேசிய தணிக்கையாய்வுத் துறையின் கண்டுபிடிப்பின் வழியும் ஒரு சில அரசு சாரா அமைப்புகளும் தனியார் திறன் பயிற்சி மையங்களும் மக்கள் நலத் திட்டங்களை மேற்கொள்வதற்காக வழங்கப்பட்ட மானியங்களை முறைக்கேடாகப் பயன்படுத்தியுள்ளதும் கருத்திணக்க ஒப்பந்தத்தில் வலியுறுத்தப்பட்ட விதி முறைகள் மீறப்பட்டுள்ளதும் கண்டுப்பிடிக்கப்பட்டது.

தேசிய தலைமை தணிக்கையாளரின் அறிக்கை தற்பொழுது நாடளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அரசு துறைகள் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள கண்டுபிடிப்புகள் மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்டு வழங்கப்பட்ட மானியங்களை முறைக்கேடாகப் பயன்படுத்தியுள்ளோர் மீது நடவடிக்கைகளை எடுப்பது ஏற்புடையதே. செடிக் நிருவாகத்தினரும் அதன் பணியாளர்களும் சம்பந்தப்பட்ட அரசு துறையினர் மேற்கொள்ளும் எவ்விதமான தொடர் நடவடிக்கைகளுக்கும் உதவப் பெரிதும் கடமைப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மானியங்களை முறைக்கேடாகப் பயன்படுத்தியுள்ளதாகக் கண்டறியப்படும் எந்தத் தனி நபர் மீதோ அமைப்பு மீதோ மேற்கொள்ளப்படும் நடவடிக்கைக்கு நாங்கள் முழு ஆதரவை வழங்குவோம் என்பது உறுதியாகும்”