புத்ரா ஜெயா : மலேசிய இந்திய சமூகத்திற்கான உருமாற்றப் பிரிவு ஒற்றுமைத் துறை அமைச்சிலிருந்து மீண்டும் பிரதமர் துறைக்கு மாற்றப்பட்டது குறித்த அறிவிப்பு, இந்திய சமூகத்தில் பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த மாற்றத்தை அரசாங்கப் பேச்சாளரும் தொடர்புத் துறை அமைச்சருமான பாஹ்மி பாட்சில் இன்று புதன்கிழமை (ஏப்ரல் 3) அறிவித்தார்.
பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரன் தலைமையில் மித்ரா தற்போது இயங்கி வருகிறது.
பிரதமர் துறைக்கு மாற்றும் முடிவானது பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் ஒற்றுமைத் துறை அமைச்சர் ஆரோன் ஆகோ டாகாங் இருவரும் இணைந்து எடுத்த முடிவு என பாஹ்மி மேலும் தெரிவித்தார். இதுகுறித்த முழு விவரங்கள் விரைவில் வெளியிடப்பட்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
நஜிப் துன் ரசாக் பிரதமராக இருந்தபோது இந்தியர் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒன்றை உருவாக்கி அதற்கு தானே தலைமையேற்றார். அந்தக் குழுவின் கீழ் செடிக் என்ற இந்தியர் உருமாற்றப் பிரிவை உருவாக்கி அதையும் பிரதமர் இலாகாவிலேயே செயல்பட வைத்தார்.
2018-இல் பக்காத்தான் ஹாரப்பான் ஆட்சிக்கு வந்தபோது துன் மகாதீர் வேதமூர்த்தியை ஒற்றுமைத் துறை அமைச்சராக நியமித்து அவரின் கீழ் செடிக் நிர்வாகத்தைக் கொண்டு வந்தார். அந்த சமயத்தில் செடிக் என்ற பெயரும் மித்ரா என மாற்றப்பட்டது.
பின்னர் முஹிடின் யாசின் பிரதமராக வந்தபோது மித்ரா பிரதமர் இலாகாவில் இருந்து ஒற்றுமைத் துறை அமைச்சுக்கு மாற்றப்பட்டது.
முஹிடின் யாசின் ஆட்சிக் காலத்தில் மஇகா தொடர்ந்து வழங்கி வந்த நெருக்குதல்கள் காரணமாக, இஸ்மாயில் சாப்ரி பிரதமர் ஆனதும் பிரதமர் இலாகாவின் கீழ் மித்ரா மீண்டும் கொண்டுவரப்பட்டது.
2022 பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பிரதமர் அன்வார் இப்ராகிம் டத்தோ ரமணனை மித்ரா தலைவராக நியமித்தார். எனினும் மித்ரா பிரதமர் இலாகாவிலேயே தொடர்ந்தது.
கடந்த ஆண்டு 2023 டிசம்பரில் மித்ரா ஒற்றுமைத் துறை அமைச்சுக்கு மாற்றப்படும் என்ற அறிவிப்பும் வெளியானது. டிசம்பர் 2023-இல் நிகழ்ந்த அமைச்சரவை மாற்றத்தில் மித்ராவின் தலைவராக இருந்த டத்தோ ரமணன் துணையமைச்சராக நியமிக்கப்பட்டார்.
இதற்கிடையில் மித்ரா தலைவராக பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரனை பிரதமர் அன்வார் அறிவித்தார்.
ஒற்றுமைத் துறை அமைச்சர் ஆரோன் ஆகோ டாகாங், அந்த அமைச்சின் துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி ஆகியோரின் மேற்பார்வையில் மித்ரா இயங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்ததைத் தொடர்ந்து மித்ரா ஒற்றுமைத் துறை அமைச்சிலிருந்து மீண்டும் பிரதமர் துறைக்கு மாற்றப்பட்டிருக்கிறது.
இந்த மாற்றத்திற்கு சமூக ஊடகங்களில் இருந்தும், இந்திய சமூகத் தலைவர்கள் தரப்புகளில் இருந்து பரவலான வரவேற்பு கிடைத்து வருவதைக் காண முடிகிறது.