Home நாடு மித்ரா : பிரபாகரன் தலைமையில் அடுத்த கட்டப் பயணம்

மித்ரா : பிரபாகரன் தலைமையில் அடுத்த கட்டப் பயணம்

435
0
SHARE
Ad
பி.பிரபாகரன்

புத்ரா ஜெயா : செடிக் எனத் தொடங்கிய காலம் முதல் பின்னர் மித்ரா என பெயர் மாற்றம் கண்டது முதல் பெரும்பாலும் அமைச்சர்களால் தலைமையேற்று வழிநடப்பட்ட மித்ரா தற்போது அடுத்தடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் தலைமையில் இயங்கி வருகிறது.

செடிக் எனத் தொடங்கப்பட்ட காலகட்டத்தில் அதன் தலைவராக அப்போதைய சுகாதார அமைச்சரும் மஇகா தேசியத் தலைவருமான டாக்டர் சுப்ரமணியம் தலைமையேற்று வழிநடத்தினார்.

2018-இல் பக்காத்தான் ஹாரப்பான் ஆட்சி மாறியபோது பொன்.வேதமூர்த்தி ஒற்றுமைத் துறை அமைச்சரானார். அவரின் தலைமையில் செடிக், மித்ரா எனப் பெயர் மாற்றம் கண்டது. தொடர்ந்து அவரே மித்ராவின் செயல்பாடுகளை வழிநடத்தினார்.

#TamilSchoolmychoice

பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்தின் கீழ் ஒற்றுமைத் துறை அமைச்சராக இருந்த ஹாலிமா முகமட் சாதிக் மித்ராவின் பொறுப்பு அமைச்சராக இருந்தார்.

2022-இல் நாட்டின் 10-வது பிரதமராகப் பதவியேற்ற டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஆர்.ரமணனை மித்ராவின் தலைவராக நியமித்தார்.

2023 ஓராண்டை வெற்றிகரமாக நிறைவு செய்தார் ரமணன். பல புதிய திட்டங்களை மித்ராவின் வழி அறிமுகப்படுத்தினார்.

டிசம்பர் 2023-இல் நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தின் கீழ் ரமணன் தொழில் முனைவோர் கூட்டுறவுத் துறை துணையமைச்சராக நியமிக்கப்பட்டார்.

ஜனவரி 7-ஆம் தேதி பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரனை மித்ரா தலைவராக நியமித்து அறிவிப்பை வெளியிட்டார் பிரதமர்.

அந்த நியமனத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்களால் தலைமையேற்று நிருவகிக்கப்படும் சூழ்நிலையில் மித்ரா இயங்கத் தொடங்கியுள்ளது.

இளைஞராகவும், பத்து நாடாளுமன்ற உறுப்பினராகவும் சிறப்பாக செயலாற்றி வரும் பி.பிரபாகரன் இந்திய சமூகத்தின் மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் 100 மில்லியன் ரிங்கிட் நிதியை மித்ராவின் வழி இந்தியர்களின் நலன்களுக்காக எவ்வாறு பயன்படுத்தப் போகிறார் – என்னென்ன திட்டங்களைக் கொண்டுவரப் போகிறார் – என்பதைக் காண இந்திய சமூகம் ஆர்வத்துடன் காத்திருக்கிறது.