
கோலாலம்பூர்: (கூடுதல் தகவல்களுடன்) பிகேஆர் கட்சித் தேர்தல்களின் ஒரு பகுதியாக கூட்டரசுப் பிரதேசத்திலுள்ள தொகுதிகளுக்கான தேர்தல்கள் இன்று சனிக்கிழமை (ஏப்ரல் 19) நடைபெற்றன. சில தொகுதிகளில் முக்கியத் தலைவர்கள் தோல்வி கண்டுள்ளனர்.
பத்து தொகுதியில் பிரபாகரன் தோல்வி
பத்து தொகுதியில் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரன் தலைவர் பதவிக்கான போட்டியில் தோல்வி கண்டார். நடப்புத் தலைவரான பிரபாகரனை எதிர்த்துப் போட்டியிட்ட ஆஷிக் அலி பின் செத்தி அல்வி 946 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பிரபாகரன் 793 வாக்குகள் மட்டுமே பெற்றார்.
புக்கிட் பிந்தாங் – சிவமலர், சரஸ்வதி கந்தசாமி தோல்வி
புக்கிட் பிந்தாங் தொகுதியில் அன்வார் பின் பவான் சிங் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட கூட்டரசுப் பிரதேச அமைச்சரின் செயலாளரும் வழக்கறிஞருமான சிவமலர் துணையமைச்சர் சரஸ்வதி கந்தசாமி ஆகியோர் உள்ளிட்ட மூவர் தோல்வி கண்டனர்.
சிகாம்புட்டில் இந்தியர் விக்னேஸ்வரன் தலைவராக வெற்றி
சிகாம்புட் தொகுதியில் விக்னேஸ்வரன் குணசேகரன் 376 வாக்குகள் பெற்று தலைவராக வெற்றி பெற்றார். எதிர்த்துப் போட்டியிட்ட மைமுனா சார்ஜண்ட் 195 வாக்குகளும், லோ குவோ திண்டே 304 வாக்குகளும் பெற்று தோல்வியடைந்தனர்.
செத்தியா வாங்சா தொகுதியில் அமைச்சர் நிக் நாஸ்மி தோல்வி
செத்தியா வங்சா தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான நிக் நாஸ்மி செத்தியா வங்சா தொகுதியின் தலைவருக்கான போட்டியில் 563 வாக்குகள் பெற்று தோல்வி கண்டார். அஃப்டிலின் ஷாவுக்கி பின் அக்சான் 631 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
லெம்பா பந்தாய் – அகமட் பாஹ்மி பாட்சில் போட்டியின்றி வெற்றி
அமைச்சர் பாஹ்மி பாட்சில் லெம்பா பந்தாய் தொகுதியில் போட்டியின்றி தலைவராக வெற்றி பெற்றார், அவர் லெம்பா பந்தாய் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினருமாவார்.
செபுத்தே – இந்தியர் தியாகராஜ் வெற்றி பெற்றார்
செபுத்தே தொகுதியில் எஸ்.தியாகராஜ் 463 வாக்குகள் பெற்று தலைவராக வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அனிதா வேலாயுதம் பிள்ளை, காரென் கஸ்தூரி ஆகிய இருவரும் தோல்வி கண்டனர்.