Home இந்தியா துரை வைகோ மதிமுக முதன்மைச் செயலாளராக விலகல்!

துரை வைகோ மதிமுக முதன்மைச் செயலாளராக விலகல்!

81
0
SHARE
Ad
துரை வைகோ – வைகோ

சென்னை: திமுகவில் நீண்ட காலம் செயலாற்றி, பின்னர் மதிமுக கட்சியைத் தொடங்கி அரசியல் களத்தில் போராடி வந்தவர் வைகோ. அவரின் மகன் துரை வைகோ மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒரு காலத்தில் வாரிசு அரசியலை எதிர்த்த வைகோவே இப்போது தனது கட்சியிலும் வாரிசு அரசியலைப் புகுத்துவது கண்டு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

சில முக்கிப் பொறுப்பாளர்கள் கட்சியிலிருந்து விலகினர். கடந்தாண்டு நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் துரை வைகோ திருச்சி தொகுதியில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார்.

மதிமுகவின் துணைப் பொதுச் செயலாளராக நீண்ட காலம் பொறுப்பில் இருப்பவர் மல்லை சத்யா. வைகோவின் தீவிர ஆதரவாளர். தற்காப்புக் கலைத் துறையில் பிரபலமாக விளங்குபவர். மகாபலிபுரத்தைத் தளமாகக் கொண்டு அரசியல் களமாடி வருவதால் மல்லை சத்யா என அழைக்கப்படுவர். அடிக்கடி மலேசியாவுக்கு வருகை தந்து தற்காப்புக் கலை விளையாட்டு நிகழ்ச்சிகளிலும், தமிழ் மொழி சார்ந்த இலக்கிய நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு தனக்கென ஒரு பெரிய நட்பு வட்டாரத்தை மலேசியாவில் கொண்டிருப்பவர்.

மல்லை சத்யா
#TamilSchoolmychoice

அவருக்கும் துரை வைகோவுக்கும் இடையில் நீண்ட நாட்களாக கருத்து மோதல்கள் நிலவின என தமிழக ஊடகங்கள் தெரிவித்து வந்தன. இந்நிலையில் கட்சியின் முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலகிக் கொள்வதாக துரை வைகோ அறிவித்துள்ளது அரசியல் வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எத்தனையோ போராட்டங்களுக்கு இடையிலும் நிலைகுலையாமல் களமாடி வந்த வைகோவின் மகன் அரசியலுக்கு வந்த ஓரிரு ஆண்டுகளிலேயே – தனது தந்தையின் கட்சியிலேயே – அரசியல் வெப்பம் தாளாமல் முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்வது அவரின் அரசியல் முதிர்ச்சியின்மையையே காட்டுகிறது.

இனி இந்தப் பிரச்சனையில் மல்லை சத்யா தன் கட்சி ஆதரவாளர்களுடன் கட்சியிலிருந்து வெளியேறுவாரா? அல்லது தொடர்ந்து மதிமுகவிலேயே வைகோ தொண்டராக நீடிப்பாரா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

இதற்கிடையில் கட்சிப் பதவியிலிருந்து விலகினாலும் மதிமுக தொண்டனாகவும் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினராகவும் எனது பணிகளைத் தொடர்வேன் என துரை வைகோ அறிவித்துள்ளார்.

திருச்சி மதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் மல்லை சத்யாவைக் கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது, திருச்சி ம.தி.மு.க நிர்வாகிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்துப் பதில் அளித்த மல்லை சத்யா, ‘எனக்கு எதிராக சிலர் தீர்மானம் கொண்டு வரலாம். ஆனால், வைகோவின் இதயத்தில் இருந்து என்னை நீக்க முடியாது’ எனக் பதிவிட்டுள்ளார்.