Home நாடு மித்ரா மாற்றம்! கோலகுபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தல் காரணமா?

மித்ரா மாற்றம்! கோலகுபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தல் காரணமா?

401
0
SHARE
Ad

புத்ரா ஜெயா : எதிர்வரும் மே 11-ஆம் தேதி நடைபெறவிருக்கும் கோலகுபுபாரு சட்டமன்றத் தேர்தல் நாட்டில் நிகழ்ந்து வரும் பல அரசியல் மாற்றங்களுக்கு அடிப்படைக் காரணம் எனக் கருதப்படுகிறது.

கையில் வாளுடன் காட்சியளிக்கும் அம்னோ இளைஞர் பகுதித் தலைவர் அக்மால் சாலேயின் புகைப்படத்திற்குப் பின்னரும் அவர் மீது காவல் துறை புகார் இல்லை என்பதால் நடவடிக்கை இல்லை எனக் கூறிய காவல் துறை தலைவரின் கூற்று பலத்த கண்டனங்களைத் தோற்றுவித்தது.

அதைத் தொடர்ந்து அக்மால் சாலே இன்று வெள்ளிக்கிழமை கோத்தாகினபாலுவில் கைது செய்யப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டவுடன் விடுதலையாகியிருக்கிறார்.

மித்ராவின் மாற்றத்திற்கும்
கோலகுபுபாரு இடைத் தேர்தல் காரணமா?

#TamilSchoolmychoice

மலேசிய இந்திய சமூகத்திற்கான உருமாற்றப் பிரிவு ஒற்றுமைத் துறை அமைச்சிலிருந்து மீண்டும் பிரதமர் துறைக்கு மாற்றப்பட்டதும் கோலகுபுபாரு இடைத் தேர்தல் ஏற்படுத்திய தாக்கம்தான் எனக் கருதப்படுகிறது.

இந்த மாற்றத்தை அரசாங்கப் பேச்சாளரும் தொடர்புத் துறை அமைச்சருமான பாஹ்மி பாட்சில் புதன்கிழமை (ஏப்ரல் 3) அறிவித்தார்.

பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரன் தலைமையில் மித்ரா தற்போது இயங்கி வருகிறது.

ஏறத்தாழ 18 விழுக்காடு இந்திய வாக்காளர்களை கோலகுபுபாரு சட்டமன்றம் கொண்டுள்ளது. 2023 கணக்கெடுப்பின்படி 46 விழுக்காடு மலாய் வாக்காளர்களையும், சுமார் 30 விழுக்காடு சீன வாக்காளர்களையும் இந்தத் தொகுதி கொண்டிருக்கிறது.

எனவே, கடுமையான போட்டியை பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி இந்தத் தொகுதியில் வழங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்தியர்களின் வாக்குகள் இல்லாமல்   பக்காத்தான் ஹாரப்பான் மீண்டும் இந்தத் தொகுதியை ஜசெக மூலம் வெல்வது கடினம்.

மித்ராவின் தற்போதைய சர்ச்சைகளுக்கு நடுவில் இந்திய வாக்குகளை கோலகுபு பாருவில் பெறுவது சிரமம் என்பதால் முதல் கட்டமாக பக்காத்தான் ஹாரப்பான் அரசாங்கம் மித்ராவை பிரதமர் துறைக்கு மாற்றும் முடிவை அறிவித்துள்ளது.

கோலகுபுபாரு இடைத் தேர்தலுக்கு முன்பாக இந்திய சமூகத்திற்கு மேலும் சாதகமான சில அறிவிப்புகள் வரலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.