Home நாடு அக்மால் சாலே கைது செய்யப்படவில்லை! விசாரணை மட்டுமே! அன்வார் விளக்கம்!

அக்மால் சாலே கைது செய்யப்படவில்லை! விசாரணை மட்டுமே! அன்வார் விளக்கம்!

458
0
SHARE
Ad

கோத்தா கினபாலு : காலுறை விவகாரத்தில் அம்னோ இளைஞர் பகுதித் தலைவர் கோத்தாகினபாலுவில் இன்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 5) காவல் துறையினரால் கைது செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியான நிலையில், அவர் விசாரணைக்காக மட்டுமே அழைக்கப்பட்டார் என்றும் மாறாக கைது செய்யப்படவில்லை என்றும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.

அதே வேளையில் 3ஆர் எனப்படும் இனம், மதம், அரச பரம்பரையினர் ஆகிய 3 அம்சங்களைப் பற்றித் தவறாகப் பேசினால் அவர் யாராக இருந்தாலும் எந்தப் பதவியை வகிப்பவராக இருந்தாலும் அவர் மீது சட்டம் பாயும் என்றும் அன்வார் எச்சரித்தார்.

இன்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 5) காலை 10.30 மணியளவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக கோத்தாகினபாலு வந்தடைந்த அக்மால் சாலே காவல் துறையினரால் தடுத்து வைக்கப்பட்டார்.

#TamilSchoolmychoice

கோத்தா கினபாலு காவல் துறை தலைமையகம் கொண்டு செல்லப்பட்ட அக்மாலிடம் இருந்து வாக்குமூலம் பெற்ற பின்னர் நண்பகல் 12.15 மணியளவில் அவர் விடுவிக்கப்பட்டார். நாளை சனிக்கிழமை (ஏப்ரல் 6) கோலாலம்பூர் காவல் துறையில் அவர் வாக்குமூலம் வழங்கவிருந்த நிலையில் இன்றே தடுத்து வைக்கப்பட்டார்.

அவருக்கான சட்ட உதவிகளை அம்னோ வழங்கும் என அம்னோ தலைமைச் செயலாளர் அஷ்ராப் வாஜ்டி தெரிவித்தார்.

அக்மால் மீது 2 புகார்கள் காவல்துறையில் செய்யப்பட்டிருக்கின்றன.

தேச நிந்தனைச் சட்டம், தொடர்பு பல்ஊடக சட்டம் ஆகியவற்றின் கீழ் அவர் விசாரிக்கப்பட்டு வருகிறார்.

தன் முகநூல் பக்கத்தில் வாள் ஒன்றுடன் காட்சியளிக்கும் புகைப்படத்தை வெளியிட்டதைத் தொடர்ந்து அக்மால் மீதான கண்டனங்கள் வலுத்தன.

இந்நிலையில் இன அவதூறு கருத்துகளை வெளியிட்டதற்காக அம்னோவின் இளைஞர் பகுதித் தலைவர் அக்மால் கைது செய்யப்பட வேண்டும் என சரவாக் சுற்றுலா, படைப்பாற்றல் தொழில் மற்றும் கலைநிகழ்ச்சிகள் அமைச்சர் அப்துல் கரீம் ரஹ்மான் ஹம்சா நேற்று வியாழக்கிழமை (ஏப்ரல் 4) காவல்துறையை வலியுறுத்தியிருந்தார்.